ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று குழுக்கள் உரிமை கோரியுள்ளதால் கட்சியின் உண்மையான பிரதிநிதிகளை நிர்ணயிப்பது தற்போது மக்களுக்குப் பிரச்சினையாக மாறியுள்ளதாக மல்வத்தை மகாநாயக்கர் திப்போடுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் உண்மையான உரிமை யாருக்கு உள்ளது என்ற கேள்விக்கு நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் நேற்று (26) மல்வத்தை விகாரைக்கு விஜயம் செய்த போதே மகாநாயக்க தேரர் இதனைத் தெரிவித்தார்.
கட்சியின் அரசியலமைப்பு இருப்பதால், எதிர்காலத்தில் நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கும் என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபையின் 116 உறுப்பினர்கள் ஏகமனதாக தம்மை செயற்பாட்டுத் தலைவராக தெரிவு செய்ததாகவும், நிறைவேற்று சபையில் 10க்கும் குறைவான உறுப்பினர்களே இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அறிவித்தார்.