இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்த்தாபகர் அமரர் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியினால் இன்று (27) இரத்ததான நிகழ்வு சித்தாண்டியில் நடைபெற்றது.
வாலிபர் முன்னணியின் தலைவர் க.சோபணன் தலைமையில் இவ் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது ஆரம்ப நிகழ்வாக நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் மங்கள விளக்கேற்றப்பட்டது. சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய பிரதம குருவினால் இறை ஆசி வழங்கப்பட்டு தந்தை செல்வாவின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இளைஞர் யுவதிகளினால் இரத்ததானம் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் இலங்கை தமிழசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், சீ.யோகேஸ்வரன், ப.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் ஆகியோர்களுடன் முன்னாள் மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் கலந்து கொண்டார்.
அத்துடன் இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட மகளிர் அணி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி இரத்ததானம் சேகரிப்பு நடவடிக்கையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் கி.டிலுகாவும் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.
க.ருத்திரன்-