சீனாவில் சிசேரியன் அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தையைப் பெற்ற பெண்ணை வீட்டுக்கு அழைத்துச்செல்ல பாரந்தூக்கிக்கு ஏற்பாடு செய்தார் அவரின் மாமியார்.
மகனின் வீடு 7ஆம் மாடியில் உள்ளது. கட்டடத்தில் மின்தூக்கி இல்லையென்பதால் மருமகள் படிக்கட்டில் ஏறச் சிரமப்படுவார் என்று அஞ்சிய மாமியாரான வாங், இந்த பாரந்தூக்கி ஏற்பாட்டை செய்துள்ளார்.
அவர் தமது மகனிடம் பாரந்தூக்கிகளை வைத்திருக்கும் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளும்படிக் கூறினார்.
சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட காணொளியில் மருமகள் பாரந்தூக்கியில் அவரின் வீட்டு மாடத்தில் இறங்கும் காட்சி தெரிகிறது.
“என் மருமகள் எனக்குப் பேரனைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவரை நான் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கப்போகிறேன்” என்றார் மாமியார் வாங்.
15 ஆண்டுகளில் இத்தகைய அழைப்பு கிடைத்தது இதுவே முதல் முறை என்று பாரந்தூக்கி நிறுவனத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.