‘ஈஸ்டர் ஞாயிறு’ பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது என்று ஜனாதிபதியாக பதவியேற்ற மறுநாள் கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசியில் தெரிவித்ததாக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் இன்று (21) தெரிவித்தார்.
அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் தமது ஆட்சியின் நட்பு அமைப்புகளும் தலைவர்களும் அந்நியப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டதாக ஆயர் வெளிப்படுத்தினார்.
‘ஈஸ்டர் ஞாயிறு’ பயங்கரவாதத் தாக்குதலை நினைவுகூரும் முகமாக கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று (21) நடைபெற்ற 5வது நினைவேந்தல் நிகழ்வில் கர்தினால் ரஞ்சித் இவ்வாறு தெரிவித்தார்.
அந்தத் தாக்குதலுக்குப் பின்னர் வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை இன்று வரை மீளப்பெற முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
தாக்குதல் தொடர்பில் ஆராய நீதிபதி விஜித் மலல்கொட தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவையும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவையும் அப்போதைய அரசாங்கம் நியமித்தது.
நவம்பர் 16, 2019 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இருந்து ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்ஷ, அந்தக் குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பானவர். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நீர்கொழும்பிலும் ஜாஎலயிலும் நடைபெற்ற அரசியல் கூட்டங்களிலும், ஆயர் பேரவையினருடனான சந்திப்பிலும் கோட்டாபய ராஜபக்ஷ, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் வெளிப்படையான விசாரணைகளை நடத்தி நீதி வழங்குவதாக உறுதியளித்ததாக கர்தினால் தெரிவித்தார்.
கடந்த வருடம் (2023) ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி, ஆயர்கள், குருக்கள் குழுவொன்று தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கடிதம் வழங்கப்பட்டதாகவும், தற்பேதைய அரசும் மௌனமாக இருப்பதாகவும், தற்போதைய அரசாங்கத்திற்கு இந்த விடயத்தில் அக்கறை இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது எனவும், தாக்குதலின் உண்மையை தற்போதைய அரசாங்கம் மறைத்து வருவதாகவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஓமல்பே சோபித தேரர் உட்பட அனைத்து மத தலைவர்களும்,
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் உள்ளுர் பிரதிநிதி மார்க் ஒன்ரே உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.