ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அறிக்கையில் முக்கிய தகவல்கள் உள்ளதாக தெரியவந்துள்ளதால், அது தொடர்பான ஆவணம் நீதிமன்றத்தில் இரகசிய ஆவணமாக வைக்கப்படும் என மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம நேற்று (4) திறந்த நீதிமன்றில் அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நீதிமன்றத்தின் பொறுப்பு என்பதால், அறிக்கையில் உள்ள உண்மைகள் உண்மையா அல்லது பொய்யா என்பதை புலனாய்வாளர்கள் கண்டறியும் வரை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட B அறிக்கையை இரகசிய அறிக்கையாக நீதிமன்றக் காவலில் வைத்திருக்க வேண்டும் என நீதவான் குறிப்பிட்டார்.
சந்தேகநபர்கள் தப்பிச் செல்லலாம் அல்லது தலைமறைவாகலாம் அல்லது அத்தகைய தகவல்களை வெளிப்படுத்துவது விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால் விசாரணைகள் முறையாக நடத்தப்படும் வரை அறிக்கை ரகசியமாக வைக்கப்படும் என நீதவான் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால், மேலதிக வாக்குமூலத்தைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சம்பந்தப்பட்ட அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பல தொலைபேசி எண்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை உடனடியாக ஆராய்ந்து நீதிமன்ற உத்தரவுகளின்படி நீதிமன்றத்தில் அறிக்கையிடுவதாகக் கூறியது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது யார் என்ற தகவல் தனக்கு கிடைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பான விசாரணை தொடர்பான நீதவான் விசாரணை நேற்று (4) நீதிமன்றில் மீண்டும் கூடிய போது இந்த உண்மைகள் முன்வைக்கப்பட்டன.