நடப்பு ஐபிஎல் சீசனின் 11வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 21 ரன்களில் வென்றது. இந்தப் போட்டியில் லக்னோ அணியின் 21 வயதான அறிமுக வீரர் மயங்க் யாதவ் அபாரமாக பந்து வீசி, தனது வேகத்தால் பஞ்சாப் அணியை சாய்த்தார்.
லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் லக்னோ அணியை கே.எல்.ராகுல் வழிநடத்தவில்லை. அவருக்கு பதிலாக நிக்கோலஸ் பூரன் தலைமை பணியை கவனித்தார். டிகொக், 38 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். கப்டன் பூரன், 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். கிருணல் பாண்டியா, 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி விரட்டியது. முதல் விக்கெட்டுக்கு பேர்ஸ்டோ மற்றும் கப்டன் ஷிகர் தவன் இணைந்து 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது இலக்கை பஞ்சாப் அணி எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
மயங்க் யாதவ்: 10-வது ஓவரில் லக்னோ அணிக்காக மயங்க் யாதவ் பந்து வீச வந்தார். மணிக்கு 150+ கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி பேட்ஸ்மேன்களை மிரட்டினார். அது ஆட்டத்தில் லக்னோ அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து 4 ஓவர்கள் வீசிய அவர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா விக்கெட்களை அவர் வீழ்த்தினார். 17வது ஓவரில் தவன் மற்றும் சாம் கரன் விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில் மோஷின் கான் கைப்பற்றினார். தவன், 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் பஞ்சாப் அணி 19 ரன்கள் எடுத்தது. 20 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.