கடந்த ஒக்டோபர் மாதம் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மரணம் உட்பட பல சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் முப்பத்தைந்து வயதுடைய பெண் கண்டி பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையடக்க தொலைபேசிக்கு சந்தேகநபரான பெண்ணின் தொலைபேசியில் இருந்து கடைசியாக அழைப்பு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த பெண் இரண்டு கைத்தொலைபேசிகளை பயன்படுத்தியுள்ளார். ஒரு தொலைபேசியில் இருந்து கப்பம் கோரி, கொலை மிரட்டல் விடுத்து தயாரிக்கப்பட்ட கடிதத்தை மற்றைய தொலைபேசிக்கு அனுப்பியுள்ளார்.
பின்னர், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். இந்த விசாரணை நடவடிக்கையின் போது, பொலிஸ் அதிகரிகளை மயக்கி, தனது வலையில் விழுத்தியதும் தெரியவந்தது.
பொலிஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய உறவை வளர்த்து, பின்னர் அவர்களுடன் உல்லாசமாக இருந்து, அதை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொள்ளும் இந்தப் பெண், பின்னர் அவற்றை காண்பித்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு பல இலட்சம் ரூபா பணம் பறித்துள்ளார். எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடனும் நெருக்கமாக இருந்து, அதை வீடியோ எடுத்து, மிரட்டியது தெரிய வந்துள்ளது.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண் பதிவு செய்த கொலை மிரட்டல் முறைப்பாடு போலியானது என தெரிய வந்தது. மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவின் மின்னஞ்சலுக்கும் இது போன்ற முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இது பொய்யான முறைப்பாடு என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளின் பின்னர் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டில் குறித்த பெண் பேராதனை ஹிந்தகல பிரதேசத்தில் உள்ள முகவரியொன்றைக் குறிப்பிட்டிருந்த போதிலும் அது போலியானது என புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.பின்னர், விசாரணை கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு கெக்கிராவ தலாவ பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எஹெலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மரண விசாரணையின் போது இந்த பெண் பொய்யான பெயரில் சாட்சியமளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விரிவான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.