யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணிகள் சிலர் காணி உறுதி மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சை விவகாரத்தில் புதிய திருப்பமாக, சட்டத்தரணியொருவருக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பணம் மேற்கொண்ட பொலிசாருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காணி உறுதி மோசடியில் சம்பந்தப்பட்டதாக பொலிசாரால் குற்றம்சுமத்தப்பட்ட யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த சட்டத்தரணியொருவரே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். காணி உறுதி மோசடி வழக்கில் இந்த சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன் பிணை பெற்றுள்ளார்.
காணி உறுதி மோசடியில் சம்பந்தப்பட்டதாக குறிப்பிட்டு சட்டத்தரணியொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன், நொத்தாரிசுகள் உள்ளிட்ட சிலர் மீது பொலிசார் காணி உறுதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தியிருந்தனர். இந்த விவகாரங்கள் தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
பொலிசாரால் கைது செய்யப்படலாமென்ற சூழலில், யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த சட்டத்தரணியொருவர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன் பிணை கோரியிருந்தார். இந்த சட்டத்தரணி சார்பில், எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் முன்னிலையாகி பிணை கோரியிருந்தார். நீதிமன்றம் முன் பிணை வழங்கியது.
இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தரப்பில் சமர்ப்பணங்களை முன்வைத்த போது, தெரிவித்த கருத்துக்கு எதிராக புதிதாக அறிமுகமான நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சட்டத்தரணி குருபரன் குமரவடிவேல் ஊடாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 1ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும்.