கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று(25) காலை கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் பல்வேறு கேள்விகளை துண்டுப்பிரசுரம் ஊடாக வெளியிட்டு நடைபெற்று வருகின்றது.
மேலும் குறித்த போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தற்போது இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் தொடர்ச்சியாக இப்போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த போராட்டம் இடம்பெற்று வரும் பகுதியில் கல்முனை தலைமையக பொலிஸார் பாதுகாப்பினை வழங்கி வருகின்றனர்.இதே போன்று கடந்த 2019 ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத போராட்டம் பல அரசியல்வாதிகள் பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் போராட்டத்தை கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தது.
மேற்குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதேச செயலகத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இதில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு,கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு களமிருங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-பாறுக் ஷிஹான்-