ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப்) உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை நேற்று சபாநாயகரிடம் சமர்ப்பித்ததாக எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
“பொதுக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்தின் நிதிப் பங்குகளைக் கொண்ட ஏனைய அரை-அரசு அமைப்புகளில் நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக கோப் நிறுவப்பட்டுள்ளது. ஆளும் கட்சி உறுப்பினரை தலைவராக நியமிப்பதன் மூலம், அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்ற குழு தவறிவிட்டது, ”என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த நோக்கத்திற்காக, 2015-2019 அரசாங்கம் கோப் மற்றும் கோபா ஆகிய இரண்டு முக்கிய குழுக்களுக்கான தலைவர்களை எதிர்க்கட்சியிலிருந்து நியமிக்கும் சிறந்த நடைமுறையை பின்பற்றியதாக பாராளுமன்ற உறுப்பினர் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டினார்.
“பரிசோதனை செய்யப்பட்ட கணக்குகள், வரவு செலவு கணக்குகள் மற்றும் மதிப்பீடுகள், நிதி நடைமுறைகள், பெருநிறுவனங்கள் மற்றும் பிற அரசு வணிக நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் மேலாண்மை குறித்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வது குழுவின் கடமையாகும். கோப் நிறுவப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அது தேவையற்ற குழுவாக மாறியுள்ளது. நிலையியற் கட்டளைகளில் உள்ள வரம்புகள் காரணமாக தவறான நிர்வாகமும் ஊழலும் பெருமளவில் கட்டுப்படுத்தப்படாமல் போய்விட்டது. நிலையியற் கட்டளை விரிவுபடுத்தப்பட வேண்டும், அங்கு முறைகேடுகள் மற்றும் மோசடிகள் வெளிச்சத்தில் இருக்கும்போது, சட்டமா அதிபருக்கு நேரடியாகச் சென்று இலஞ்ச ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலையியற் கட்டளைகளை மட்டுப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் செயல்முறையைத் தடுக்கிறது, இதனால் கோப்பின் செயல்திறன் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது,” என்று அவர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கூறுகையில், கோப் குழுவின் நோக்கத்தை மீள்பரிசீலனை செய்வதற்கும் நிலையியற் கட்டளைகளை விரிவுபடுத்துவதற்கும் இதுவே சரியான தருணம் என அவர் கருத்து தெரிவித்தார்.
“சட்டப்பூர்வத்தன்மை இல்லாத தற்போதைய அரசாங்கம், சமீபத்திய நியமனங்கள் மூலம் தவறான நிர்வாகம் மற்றும் ஊழலை மறைக்க மற்றும் பாதுகாக்க முயல்கிறது என்பது தெளிவாகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.