வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் 8 தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டது, கோயிலுக்குள் புகுந்த பொலிசார் நெறிமுறைகளை மீறி செயற்பட்டது போன்ற விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்துவதற்கான கலந்துரையாடல்கள் நடந்து வருகிறது.
வெடுக்குநாறிமலை விவகாரம் வெறுமனே பொலிசார் சம்பந்தப்பட்ட விவகாரமல்ல, அதற்கும் அப்பாலான சக்திகள்- பலமான பின்னணியுடன்- பொலிசாரை வைத்து இயங்கி வருவதாக கருதப்படுவதால், இந்த விவகாரத்தில் தீவிரமாக செயற்பட வேண்டுமென்ற தேவை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுந்துள்ளது.
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகள் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட விதம், அவர்கள் சிறைச்சாலைக்குள் நடத்தப்பட்ட விதம், தொல்லியல் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டதாக தொல்லியல் பணிப்பாளர் அறிக்கையளித்தது அனைத்துமே- தமிழ் மக்களின் மீதான பௌத்த ஆக்கிரமிப்பின் நிறுவனமயப்படுத்தப்பட்ட அம்சத்தின் கூட்டிணைவு என்பது தமிழ் தரப்பின் பொது அப்பிராயமாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தின் அரசியல் முக்கியத்துவத்தை கருதி, அடுத்த பாராளுமன்ற அமர்வில்- கவனயீர்ப்பில் ஈடுபடுவது பற்றி தமிழ் கட்சிகள் ஆலோசிக்க ஆரம்பித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் தமிழ் பக்கத்துடன் பேசிய நாடாளுமன்ற அங்கத்துவமுடைய தமிழ் கட்சிகள், நாடாளுமன்றத்துக்குள் அல்லது வெளியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக போராட்டம் நடத்துவது பற்றிய கலந்துரையாடலில் இருப்பதை உறுதி செய்தனர். இது பொதுமுக்கியத்துவம் மிக்க விவகாரம் என்பதில் அனைத்து கட்சிகளும் ஒத்தநிலைப்பாட்டில் உள்ளனர்.
தமிழர்களுக்கு எதிரான மத ஆக்கிரமிப்பை சிங்கள பௌத்த இயந்திரம் கச்சிதமாக செயற்படுத்தி வருவதை சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு வரும் முயற்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அமைச்சர் ஒருவரின் பின்னணியிலேயே அத்தனை விடயங்களும் செயற்படுத்தப்பட்டதாக கட்சியொன்றின் பிரமுகர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
கைதானவர்கள் மீது தொல்லியல் சட்டம் பாய்ந்துள்ளது- இந்த விவகாரத்தில் தமிழ் மக்களை அச்சுறுத்தி, வெடுக்குநாறிமலை பக்கம் வருவதையே தடுக்கும் நோக்கமுடையது என்பதால், இந்த விவகாரத்தில் தலையிட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு, மலையக தமிழ் அரசியல் கட்சிகளிடம் கோரும் நகர்வையும் மத தலைவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
அரசில் இணைந்திருக்கும் ஈ.பி.டி.பி போன்ற தமிழ் தரப்புக்கள் இந்த விவகாரத்தில் தலையிடும், தடுத்து நிறுத்தும் சக்தியற்றவையென்பது ஏற்கெனவே வெளிப்பட்டு விட்டதால், அரச தரப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளை அணுகுவதை பெரும்பாலான மதத்தலைவர்கள் விரும்பவில்லையெனவும் அறிய முடிகிறது.