கிளிநொச்சி, இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் வீடு புகுந்து நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 9 மணியளவில் இந்த பயங்கர சம்பவம் நடந்தது.
இராமநாதபுரம் பகுதியில் இரண்டு தரப்புக்கிடையில் அண்மைக்காலமாகஎழுந்த முரண்பாட்டின் தொடர்ச்சியாக இந்த வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
சில மாதங்களின் முன்னர், இந்த பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் போதைப்பொருள் விற்பனை, கசிப்பு காய்ச்சுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக துண்டுப்பிரசுரங்கள் அச்சிடப்பட்டு, வீசப்பட்டிருந்தது.
துண்டுப்பிரசுரம் வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருந்தார்கள் என குறிப்பிட்டு, இன்னொரு இளைஞர் குழுவுடன், துண்டுப்பிரசுரத்தில் பெயர் குறிப்பிடப்படட இளைஞன் முரண்பட்டார். இது பகையாகி தொடர் மோதலாக மாறியுள்ளது.
துண்டுப்பிரசுரம் அச்சிட்டவர்கள் என குறிப்பிட்டு, சில இளைஞர்கள் தாக்கப்பட, அவர்கள் பதிலடி கொடுக்க… இராமநாதபுரமே கலவர பூமியாகியுள்ளது.
இந்த மோதலின் தொடர்ச்சியாகவே நேற்று இரவும் வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணியளவில் இளைஞர் குழுவொன்று வீடு புகுந்து, அங்கிருந்தவர்கள் மீது மிளக்காய்த்தூள் விசிறி, வாளால் வெட்டியது. இதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு பெண்ணுக்கு கை துண்டிக்கப்படும் நிலையில் காணப்படுகிறது.
இச்சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர்கள் 5 பேரை பொலிசார் கைது கைது செய்துள்ளனர் ஏனையோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராமநாதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.