பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர்க்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்..
இந்த வழக்கில் 2019-ம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது.விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயவேல், “புகார் குறித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது. எனவே இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளான அமைதியை சீர் குலைத்தல், தெரிந்த குற்றம் என கருதி மிரட்டல் விடுத்தல், பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது” என தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து, அபராத தொகையை செலுத்திய பிறகு தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்ததை ஏற்று, தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.