சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து போரட்டு உயிரிழந்த முதலாவது இலங்கையர் சஃப்ராஸ் மிலான் அஹமட்டின் பெற்றோருக்கு இனந்தெரியாத ஒருவர் சுமார் 20 மில்லியன் ரூபாவை வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்புச் சட்டத்தை ஒடுக்குவதற்கான உடன்படிக்கையின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
2015ஆம் ஆண்டு சிரியாவில் நடந்த போரில் முகமது முஹுசின் சஃப்ராஸ் மிலன் அகமது கொல்லப்பட்டது தெரியவந்துள்ளதாகவும், அவரது சகோதரர் முகமது முஹுசித் இஷாக் அகமதுவும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
தெஹிவளை சேர் பரோன் ஜயதிலக்க மாவத்தையில் உள்ள முகவரியில் இவர்களது பெற்றோரும் சகோதரியும் வசிப்பதாகவும், 2018 ஆம் ஆண்டு இரண்டு தடவைகள் அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை ரூபா அடங்கிய இரண்டு பார்சல்களை இனந்தெரியாத நபர் ஒருவர் கொண்டு வந்ததாகவும் நீதிமன்றில் விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கூறி கைது செய்யப்பட்ட மொஹமட் இமாட் இம்திசாம் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த பணம் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளதாக அவர்கள் நீதிமன்றில் தெரிவித்தனர்.