பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் தவறாக செயற்படுகிறார்கள் என சமய சொற்பொழிவாளர் ஆறுதிருமுருகன் ஆற்றிய உரைகளை தொகுதித்து, தெல்லிப்பளை பிரதேச செயலகம் வெளியிட்டுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“இப்போதெல்லாம் பழைய தமிழ் பெண்களை காண முடிவதில்லை“… “பெண்கள் இப்போது சுத்த மோசம்“- இவையெல்லாம் எல்லாக்காலத்திலும் உள்ள ஆண்களின் மனக்குறைதான்.
ஆனால், அது பல தர்க்க முரண்கள் கொண்ட, ஆணாதிக்க மனநிலையென்பது பெரும்பாலானவர்களுக்கு புரிவதில்லை. புரிந்தாலும், அதை கழிவிரக்கமாக பேசியே ஆகக்குறைந்த வீதமான பெண்களையாவது மடக்கி வைத்து விட வேண்டுமென்பது இந்த வகை ஆண்களின் உத்தி.
பெண்கள் கவர்ச்சியாக உடையணிவது- ஒரு தலைப்பட்சமான நிகழ்வல்ல. அது சமூகத்தின் மாற்றம். அதை ஆண்கள் ரசிப்பதால்தான், அந்த ஆடைகளை ஆண்களும் தயாரிப்பதால், விற்பதால் இந்த மாற்றம் நிகழ்கிறது. இன்னும் சொல்லப் போனால் ஒரு பெண் அல்லது ஆண் நடந்து கொள்வது, பெரும்பாலும் அவரை சார்ந்தவர்களின் விருப்பங்களை முழுதுமாக புறந்தள்ளி செயற்படும் வாய்ப்பு குறைவு. யாரோ ஒரு பெண் கவர்ச்சியாக செல்கிறார் என்று, அந்த பெண்ணை விழுங்குவதை போல பார்த்து ரசித்து விட்டு, பின்னர் வந்து உச்சுக்கொட்டுவதெல்லாம் மனக்கோளாறு.
ஆனால் அந்த மனக்குறையை சமூகத்தில் பிரசங்கித்து வாழ்க்கையை ஓட்ட எல்லாக்காலத்திலும் ஆட்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள். அப்படித்தான் இப்பொழுது ஆறுதிருமுருகன் பிரசங்கம் என்ற பெயரில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை பேச, அதை பொறுப்பு மிக்க அரச நிறுவனமான பிரதேச செயலகமே பகிர்ந்ததுதான் அதிர்ச்சியளிக்கும் விடயம்.
அண்மையில் கலாச்சாரத்தை பாதுகாக்குறோம் என்ற பெயரில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அரைக்காற்சட்டையுடன் சென்றவர்கள் தடுக்கப்பட்டிருந்தனர். ஆனால் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஒரு போதைக்கூடாரமாக மாறி வருகிறது. பல்கலைகழக மாணவர்கள் போதைப்பொருளுடன் பொலிசாரிடம் பிடிபட்டாலும் பல்கலைகழகம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என தற்போதுள்ள துணைவேந்தர் தலைமையில் நிர்வாகம் எடுத்த “கலாச்சாரத்தை பாதுகாக்கும்“ முடிவும் இதற்கு ஒரு காரணம்.
தற்போது பொலிசார் தாக்கியதாக போலியாக முறைப்பாடளித்த பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது உறுதியாகியுள்ளது. அவர் மீது ஏற்கெனவே குற்றவழக்கொன்றும் இருந்துள்ளது.
கலாச்சாரமென்பது பெண்களின் உடலுக்குள்ளும், அணியும் ஆடைக்குள்ளும் இருக்கிறது என்ற பிற்போக்குதனமான பார்வை கொண்டவர்கள்தான் கணிசமானவரகள். இதற்கு ஆறுதிருமுருகன் வகையறாக்கள் விதிவிலக்கல்ல என்பது ஆச்சரியமளிக்கும் விடயமல்ல. ஆனால் யாழ்ப்பாண பல்கலைகழகம், தெல்லிப்பளை பிரதேச செயலகம் போன்ற அரச நிறுவனங்களும் இப்படி மூடக்கருத்துக்களை விதைக்கும் நிறுவனங்களாக மாறி வருவதே அதிர்ச்சியளிக்கும், ஆபத்தான அம்சம்!
தெல்லப்பளை பிரதேச செயலாளராக தற்போது திருமதி சிவகெங்கா சுதீஸ்னர் பதவி வகிக்கிறார்.
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் பேஸ்புக் பக்கத்தின் சர்ச்சைக்குரிய பதிவு-