தமது பிரச்சினைகள் தொடர்பில் நிதியமைச்சுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் முதற்கட்ட நடவடிக்கை ஜனாதிபதியின் தலையீட்டினால் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, சுகாதார சேவையுடன் இணைந்த 72 தொழிற்சங்கங்கள் நாளை (7) மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்தவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்று (6) மாலை 4.30 மணியளவில் நிதி அமைச்சில் நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், தமது கோரிக்கைக்கு நல்ல பதிலை வழங்குவதற்கு அமைச்சின் பிரதிநிதிகள் செயற்பட்டதாகவும் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா DAT கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் இந்தக் கலந்துரையாடலைக் கோரியிருந்தனர்.
சுகாதார சேவை தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பங்களிப்புடன் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக கட்டமைப்பு ரீதியான தீர்வுக்கான உத்தியோகபூர்வ குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் தலைமையிலான உத்தியோகபூர்வ குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளதாகவும் அதற்கமைய சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை இடைநிறுத்தப்படுவதாகவும் குமுதேஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சுகாதார சேவையுடன் இணைந்த 72 தொழிற்சங்கங்கள் இதற்கு முன்னர் மூன்று தடவைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.