வெளிநாடு செல்ல தடைவிதிக்க்பட்டு, நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண ரௌடியொருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெளிநாட்டு கடவுச்சீட்டில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிடமிட்டிருந்தது தெரிய வந்தது.
யாழ்ப்பாண மக்களை பயமுறுத்திய “ஆவா கும்பல்” ரௌடியொருவரே, கல்கிசையில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் பாணந்துறை வலான பொலிஸ் மத்திய ஊழல் ஒழிப்பு செயலணியினர் நேற்று கைது செய்துள்ளனர்.
மல்லாகம், நீலியம்பனை பிள்ளையார் கோயிலடியை சேர்ந்த பிரபா என அழைக்கப்படும் பிரபாகரன் கௌசின் என்ற 25 வயதான சந்தேக நபர் கல்கிசை யசோரபுர பகுதியில் உள்ள வீடொன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், வேறொருவரின் பெயரில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு பயணக் கடவுச்சீட்டைக் கொண்டு நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கு தேவையான ஏற்பாடுகளை அவர் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன. அவர் போதைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபருக்கு ஆவா ரௌடிக்குழுவில் ‘குயின்சி தம்பா’ என்ற குறியீட்டு பெயர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆவா 001 என்ற குறியீட்டு எண்ணையும் கொண்டிருந்தார்.
ஆவா ரௌடியான வினோத்தின் நெருங்கிய சகா இவர். வினோத் ஆவா குழுவின் தலைவராக செயற்பட்டவர். அவருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்போது, கௌசிகன் மீதும் பல்வேறு வழக்குகள் பாய்ந்தன.
யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு தாக்குதல்கள், தீவைப்பு மற்றும் உடல் உறுப்புகளை சிதைத்தமை உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் தொடர்பில் அவரை கைது செய்ய யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றினால் இரண்டு திறந்த பிடியாணைகளும், மலலகம் நீதவான் நீதிமன்றத்தினால் இரண்டு பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.