பேருவளை காலி வீதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் நுழைந்த திருடன், வங்கியில் உள்ள எச்சரிக்கை இயந்திரம் ஒலிக்கத் தொடங்கியதும் பீதியடைந்து அறையொன்றுக்குள் ஒளிந்து கொண்டார்.
அவரை பேருவளை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
வங்கியின் எச்சரிக்கை இயந்திரம் ஒலிக்கத் தொடங்கிய நிலையில், பேருவளை பொலிஸ் குழு ஒன்று அதிகாலை 3.50 மணியளவில் வங்கி வளாகத்திற்கு வந்து வங்கி கட்டிடத்தை சுற்றிவளைத்தது. இதற்கிடையில் பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வங்கி நிர்வாகத்திற்கு சம்பவம் தொடர்பில் அறிவித்ததையடுத்து முகாமையாளர் காலை 6.30 மணியளவில் அங்கு வந்துள்ளார்.
வங்கியின் பிரதான கதவை திறந்து வைத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கட்டிடத்தின் அறையில் பதுங்கியிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியின் பெட்டகம் அமைந்துள்ள அறையின் கதவை திருடன் உடைத்ததை அடுத்து பாதுகாப்பு சமிக்ஞைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
எச்சரிக்கை மணி ஒலித்ததையடுத்து அந்த நபர் பீதியடைந்து அறையொன்றில் ஒளிந்துகொண்டதாகவும் இதன் காரணமாக வங்கியின் சொத்துக்கள் எதனையும் திருட முடியாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.