ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய அனுமதியின்றி மாமியார் தனது ‘மேக்கப் கிட்’டை பயன்படுத்துவதாகக் கூறி கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தரக் கோரியுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
ஆக்ராவில் மல்புரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்ததுள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் விவகாரத்து கோரியுள்ளார். அதற்கு அவர் தெரிவித்த காரணங்கள், பலராலும் விவாதிக்கப்படுகின்றன.
‘என் மாமியார் என்னிடம் கேட்காமலேயே எனது ’மேக்கப் கிட்’டை பயன்படுத்துகிறார். என்னுடைய விலையுயர்ந்த ஆடைகளையும் அவர் அணிகிறார்.
விழாக்களுக்கு, நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதெல்லாம் ஆடம்பரமாகக் காட்டிக்கொள்ள என்னுடைய அழகு சாதனப் பொருள்களையும் மாமியார் பயன்படுத்துகிறார். இந்தப் பொருள்களை எல்லாம் பயன்படுத்துவதற்கு என்னிடம் அனுமதி கேட்காமலேயே வரம்பற்று பயன்படுத்துகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆக்ரா காவல்துறையின் குடும்ப நல ஆலோசனை மையத்தை அணுகிய அந்தப் பெண், தன் மாமியார் தனது ஆடைகளை அணிவது மற்றும் தன்னுடைய அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் தானும், தன் தங்கையும் அந்த வீட்டை விட்டு வெளியேறி தங்களுடைய அம்மா வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்ணுக்கும் அவரின் மாமியாருக்கும் கவுன்சலிங் கொடுக்கப்பட்டும், விவாகரத்து செய்யும் முடிவில் அந்தப் பெண் உறுதியாக இருப்பதாக குடும்ப நல ஆலோசகர் அமித் கவுர் தெரிவித்துள்ளார்.
’மேக்கப் கிட்’டுக்காக பெண் ஒருவர் நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரியுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.