போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஈஸி காஷ், எம் காஷ் போன்ற முறைகளை பயன்படுத்தி போதைப்பொருள் கொள்வனவு செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் புலனாய்வு பிரிவின் ஆதரவுடன் நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய விசேட நடவடிக்கை நேற்று (31) மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.
1,964 ஈஸி காஷ் மற்றும் எம்-காஷ் மையங்கள், 2,131 அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் தகவல் தொடர்பு மையங்கள், ரீலோட் மற்றும் பில் செலுத்தும் மொபைல் மெஷின்கள் 1,074 இடங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட வணிக வங்கிக் கிளைகளைக் கொண்ட 1,202 இடங்களில் இந்தச் செயல்பாடு நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கைகளில், சந்தேகத்தின் பேரில் 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருபது சந்தேக நபர்களும், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பதினொரு சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் அவர்கள் சட்டவிரோதமாகச் சம்பாதித்துள்ள சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவிக்கிறது.