கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்று கடுவலை கொடெல்ல பிரதேசத்தில் காட்டுப்பகுதியில் வைத்து இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கார் முழுவதுமாக தீக்கிரையாகி காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற காரின் இலக்கமான CAO-5345 என்ற இலக்கத்தை கொண்ட வெள்ளை நிற மோட்டார் வாகனமொன்றை பாணந்துறை எலுவில பிரதேசத்தில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.
இன்று பிற்பகல் மோட்டார் வாகனமொன்றில் விகாரை வளாகத்திற்குள் நுழைந்த நான்கு சந்தேக நபர்கள் அங்கிருந்த தேரர்களிடம் இங்கு ஜாதகம் பார்க்கும் தேரர் யார் என வினவியுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறி துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றதாக விகாரையின் தேரர் ஒருவர் தெரிவித்தார்.
துப்பாக்கி குண்டுகள் அவரது இடது கை மற்றும் மார்பில் தாக்கியதுடன், காயமடைந்த தேரர் உடனடியாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்து காணப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலபலுவாவே தம்மரதன என்ற 44 வயதுடைய தேரரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவராவார்.