செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் போக்குவரத்து சோதனைக் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை நேற்று முன்தினம் (17) தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதன் ஆவணங்களைச் சரிபார்க்கச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மோட்டார் சைக்கிளில் வந்தவரின் சகோதரர்கள் இருவர் அந்த இடத்திற்கு வந்து இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கியுள்ளனர்.
இதன்போது பொலிஸ்காரர் ஒருவரின் கையில் ஒருவர் கடித்துள்ளார்.
இது தொடர்பில் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து மேலதிக பொலிஸ் குழுவொன்றை சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளனர்.
பொலிசாரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். செட்டிகுளத்தை சேர்ந்த 22 வயதுடைய பஸ் உதவியாளர் ஒருவரும், 27 வயதுடைய சாரதி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.