ஹூதி ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் கப்பலை நிலைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைக்கு எதிராக பழிவாங்குவதாகக் கூறும் ஈரானிய ஆதரவு ஹூதி போராளிகளால் செங்கடல் பகுதியில் பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதனால், சர்வதேச கப்பல் நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்திக்கின்றன.
உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்ட இடையூறு ஏற்கனவே சரக்குச் செலவுகளை அதிகரித்து, பயண நேரத்தை அதிகரித்துள்ளது. பல நிறுவனங்கள் விநியோக நேரத்தை நீட்டித்துள்ளன.
“செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது ஹூதி தாக்குதல்களால் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதை எதிர்கொள்ள, கப்பல்கள் செங்கடலில் செல்லாமல் தென்னாப்பிரிக்காவை சுற்றி திரும்பினால், சரக்கு செலவுகள் அதிகரிக்கும்,” என்று கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க நினைவு கண்காட்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.