இன்னும் 4 வருடங்கள் கட்சித் தலைமை பதவியை வகிப்பேன். 65 வயதில் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசு கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் எம்.ஏ.சுமந்திரன், அதற்கு ஆதரவு திரட்டும் முகமாக கிழக்கிலுள்ள தொகுதிக்கிளைகளை சந்தித்து வருகிறார். இந்த கூட்டங்களிலேயே மேற்படி அறிவிப்பை விடுத்து வருகிறார்.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இந்த சந்திப்புக்கள் நடந்தன. அனைத்து சந்திப்புக்களிலும், 65 வயதில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்னும் 2 மாதங்களில் 60 வயதையடைவதாகவும், 5 வருடங்களின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் தெரிவித்தார்.
கட்சி யாப்பின்படி 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, களுவாஞ்சிக்குடியில் உள்ள இராசபுத்திரன் சாணக்கியனின் வீட்டில் நடந்த சந்திப்பில் சற்று சூடான நிலைமையேற்பட்டது.
ஒந்தாச்சிமடத்தை சேர்ந்த தமிழ் அரசு கட்சி உறுப்பினர் சண்முகம் பேசியபோது –
மட்டக்களப்பில் இருந்து யோகேஸ்வரன் தலைமை பதவிக்கு போட்டியிடுகிறேன். அதை நினைத்து தலைகுனிகிறேன். தமிழ் அரசு கட்சிக்கு தலைமை தாங்க அவருக்கு என்ன தகுதியுள்ளது என்றார்.
இதன்போது, கல்லாறை சேர்ந்த மற்றொரு உறுப்பினரான குபேரன் என்பவர் ஆட்சேபணை தெரிவித்தார்.
“இது ஜனநாயக கட்சி. ஜனநாயகரீதியில் அனைவருக்கும் போட்டியிட முடியும். அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். அவரை தரக்குறைவாக இங்கு பேச முடியாது. உங்களது கருத்துக்களை மீளப்பெறுங்கள்“ என்றார்.
இருந்தபோதும், குபேரன் தொடர்ந்து பேச முடியாதவாறு சாணக்கியன் தடுத்து உட்கார வைத்தார் என அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.