தமிழர்கள் என்பதற்காக நாம் எல்லோரும் ஒற்றுமையாக இயங்க வேண்டும் என எதிர்பார்ப்புக் கொள்வதற்கு அவரவரது அரசியல் அபிலாஷைகளைப் புரிந்து கொள்வது அவசியம். இலங்கையில் இருந்து பிரிந்து செல்கின்ற சுயநிர்ணய கோட்பாட்டை முன்வைக்கின்ற இலங்கைத் தமிழர் நிலைப்பாட்டில் இருந்து தம்மை முழுமையாக இலங்கையராக ஏற்றுக்கொள்ளுங்கள் எனும் மலையகத் தமிழரின் அரசியில் அபிலாஷை மாறுபட்டது. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்வதில்தான் தமிழர்களின் ஒற்றைமை தங்கி இருக்கிறது என முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வாவின் 125வது பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து கல்முனை யில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு ‘ மலையகம் குறித்த தந்தை செல்வாவின் பார்வையும் பங்களிப்பும்’ எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றிய போதே திலகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இன்று தந்தை செல்வாவின் 125 வது பிறந்த தினத்தை நினைவு கூரும் இதே ஆண்டில்தான் மலையக தேசபிதா கோ.நடேசய்யரின் 75 ஆவது மறைவு ஆண்டும் நினைவு கூரப்படுகின்றது. மறுவகையில் கூறுவதானால் தந்தை செல்லவாவைவிட பத்து வயது மூத்தவரான கோ. நடேசய்யர் அவர்களினால்தான் மலையக அரசியலுக்கு அத்திவாரம் இடப்பட்டது. அந்த வகையில் நூறாண்டு கால அரசியல் வரலாற்றைக் கொண்ட மலையக அரசியல் களத்தினில் தந்தை செல்வாவின் பார்வையும் பங்களிப்பும் எவ்வாறு இருந்தது என்றே நாம் நோக்க வேண்டி உள்ளது.
தந்தை செல்வா மலையகம் குறித்த பார்வையும் பங்களிப்பும் மூன்று நோக்கில் அமைந்ததாக என்னால் நோக்க முடியும்.
பண்பாட்டு அடிப்படையில் – தமிழ் மொழிச்சமூகமாக மலையகத் தமிழர்களையும் இணைத்துக்கொண்டு பயணிப்பது எனும் நிலைப்பாடு இதனடிப்படையிலேயே கோ. நடேசய்யர், கவிஞர் சக்தீ பால அய்யா போன்றவர்களை சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியக் குழுவில் இணைத்துக் கொண்டு செயற்பட்டுள்ளார்.தந்தை செல்வா வுடன் இயங்கிய காலகட்டத்தில் கவிஞர் சக்தீ பால அய்யா ‘சொந்த நாட்டிலே’ – தமிழ்த்தேசிய கீதங்கள் – எனும் நூலை எழுத, அது சுதந்திரன் பிரசுரத்தினாலேயே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் இலங்கையில் தடைச் செய்யப்பட, சக்தீ பால அய்யா தலைமறைவு வாழ்க்கை வாழ நேர்ந்துள்ளது.
தொழிற்சங்க அடிப்படையில் – இலங்கைத் தமிழ் அரசு கட்சி சார்ந்து செயற்பட்ட தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் கழகம் மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆனாலும் அது வெற்றி அளிக்கவில்லை.
அரசியல் அடிப்படையில் ஆரம்பத்தில் தான் பிரிந்து சென்ற தமிழ் காங்கிரஸையும் இணைத்துக்கொண்டு உருவாக்கி தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியில் மலையகத் தமிழர்களின் பிரதிநிதியாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும் இணைத்துக்கொண்டு செயற்பட தந்தை செல்லவா எத்தனித்துள்ளார்.ஆனாலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னதாக அந்த முயற்சி கைகூடாது போனது. இன்றளவிலும் அன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்து விலகிச் செல்லும் தீர்மானத்தை தொண்டமான் எடுத்தது சரியானதே என்பதை நான் உறுதியாகக் கூறி வருபவன்.
ஆனால் இன்றும் அந்த அரசியல் சூழலை நினைவு கூர்பவராக வீ. ஆனந்த சங்கரி அய்யா தனது கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் தந்தை செல்வா- ஜி.ஜி. பொன்னம்பலம் -தொண்டமான் ஆகிய மூவரின் படங்களையும் தனது அலுவலகத்தில் காட்சிப்படுத்தயவாறே அமர்ந்துள்ளார்.
இவ்வாறாக இந்தச் சமூகங்கள் ஒன்றிணைந்து அரசியல் செய்வதற்கு முயற்சித்து இருக்கின்றன. தந்தை செல்வாவின் மறைவோடு இந்த ஒட்டுறவும் இல்லாமல் ஆகிறது. தந்தை செல்வா வை நினைவு கூரும் போதெல்லாம் தமிழரசு கட்சியின் உருவாக்கமும் அதற்கு உடனடி காரணமாக இருந்த மலையகத் தமிழரின் குடியுரிமைப் பறிப்பும் பேசப்படுகிறது. குடியுரிமைப் பறிப்புக்கு யார் யாரெல்லாம் துணை போனார்கள் என்ற வாத விவாதத்தில் நான் அக்கறை காட்டுவதில்லை ; காரணம் அவை முடிந்து போன சம்பவங்கள். காரணங்கள் கண்டடையப்படுவதால் தவறுகள் சரி செய்யப்படுவது இல்லை.
ஆனால், மலையகத் தமிழரின் குடியுரிமைப் பறிப்புதான் தமிழரசு கட்சி யின் தோற்றம் என்றால், மலையகம் நோக்கிய அதன் வேலைத்திட்டம் என்ன ? சமகால மலையக அரசியல் குறித்த தமிழரசுக்கட்சியின் புரிதல் என்ன ? மலையகத் தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்களில் எவ்வாறு தமிழரசு கட்சி தனது தார்மீகத்தை வெளிப்படுத்த போகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும்போதே தந்தை செல்வா மலையகத் தமிழர்கள் உரிமை மறுப்புக்காகவே தமிழரசு கட்சியைத் தொடங்கினார் எனும் கூற்றுக்கு சாட்சி பகிர முடியும்.
உதாரணமாக பிரதேச செயலக விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். குடியுரிமை பறிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களுக்கு நிர்வாக அதிகார பகிர்வு மறுக்கப்பட்ட காரணத்தினால்தான் இன்றுவரை கிராம சேவகர் பிரிவு, பிரதேச செயலகப் பிரிவு போன்ற அரச சேவை வழங்கும் பிரிவுக்குள் மக்கள் உள்வாங்கப்படாமல் இருக்கின்றார்கள். எனவே மலையகத் தமிழரின் குடியுரிமைப் பறிப்பைத் தாற்பரியமாகக் கொண்டு தமிழரசுக்கட்சி உருவாக்கப்பட்டது என்றால், இன்று பிரதேச செயலகங்களைப் பெற்றுக் கொள்வதற்கான மலையக மக்களின் போராட்டத்தில் தமிழரசுக்கட்சி எவ்வாறு தன்னை இணைந்துக் கொள்கிறது.
அதிகார பகிர்வாக பிரதேச செயலக விடயத்தில் மலையகத்துக்குக் காட்டப்படும் பாரபட்சம் வடக்கு முதல் தெற்கு வரை கிழக்கு முதல் மேற்குவரை என மலையக அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணம் சென்ற வேளை தனிமனிதராக அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் அந்தப் போராட்டத்திற்கு வழங்கிய ஆதரவு எடுத்துக்கொண்ட அக்கறையை நாம் ஒரு கட்சியாக தமிழரசு கட்சியிடம் காணக் கிடைக்கவில்லை. தனிப்பட்ட வேண்டுகோள் நிமித்தம் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் ஓர் அறிக்கை விட்டாரே அன்றி தமிழரசுக்கட்சி மலையகம் சார்ந்த இத்தகைய விடயங்களில் ஒரு கொள்கையைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை . இந்த நிலையில் எவ்வாறு இருவேறு தமிழ் தரப்புகள் ஒன்றாக அரசியலில் சேர்ந்தியங்க முடியும்.
முஸ்லிம் தரப்பு அரசியலிலும் கூட இந்த புரிதல் வேண்டப்படுகிறது. கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் செல்லும் வீதியில் ஐந்து நிமிட பயண இடைவெளியில் ஐந்து பிரதேச செயலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவுல்லா அமைச்சராக இருந்தபோது அவரது மாவட்டம் சார்ந்து அதனைச் செய்ய முடியுமெனில் ஏன் அவரது அமைச்சு காலத்தில் அமைக்கப்பட்ட உப குழுவின் ஊடாக மலையகத்தில் நிலவும் பிரதேச செயலகப் பிரச்சினைக்கு ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுத்து இருக்க முடியாது என்கின்ற கேள்வியை முன்வைக்க வேண்டி உள்ளது. எனவே மலையகத் தமிழ் மக்களை சகோதர தமிழ் முஸ்லிம் சமூகங்கள் புரிந்து கொள்வது என்பதும் ஒற்றுமையாகச் செயற்படுவது என்பதும் வெற்று வார்த்தை கோஷங்களால் நிறைவேறக் கூடிய ஒன்றல்ல. அது அனுமானத்தின் பாற்கட்டதாக அல்லாமல் அரசியல் புரிதலின்பாற்பட்டதாக அமைதல் வேண்டும்.
மறுபுறமாக தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தந்தை செல்வா சொல்லிவிட்டுச் சென்றிருக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஏனெனில் அத்தகைய கடவுள் வந்து தமது பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும் என ஆன்மிகத்தை நம்பியே அரசியலை கையிலெடுத்துச் செயற்படாத சமூகமாக தமிழ்சமூகம் மாறிவிட்டதோ எனத் தோன்றுகிறது. ஒன்றில் கடவுளை நம்பி இருக்கிறார்கள் அல்லது கடவுளரை உருவாக்கி ஆண்டுதோறும் அதனை வழிபடச் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அண்மையில் ஒரு பெண் கடவுளையும் உருவாக்கி தமிழர் அரசியலை கேலிக்கையாக்கி கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழர்களை காக்க கடவுளர்கள் அல்ல நல்ல தலைவர்களே தேவை. அத்தகைய தலைமைகளை உருவாக்க தந்தை செல்வா போன்ற பெருந்தலைவர்களின் நினைவேந்தல்கள் பயன்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.