இலங்கை தமிழ் அரசு கட்சியின் கல்முனை கிளையில் பிள ஏற்பட்டுள்ளது. தலைவரின் தன்னிச்சையான செயற்பாட்டினால் அதிருப்தியடைந்துள்ள உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவர் தெரிவு விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக, தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு இம்முறை நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் தெரிவையொட்டி கட்சிக்குள் குழப்பங்களும் ஆரம்பித்துள்ளது.
இந்த பின்னணியில், கல்முனை தொகுதிக்கிளையிலும் பிளவு ஏற்பட்டுள்ளது.
கல்முனை தொகுதிக்கிளையின் தலைவராக இருப்பவர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரவாளர். நேற்று ஞாயிற்றுக்கிழமை, கல்முனை தொகுதிக்கிளை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
தலைமைப் பதவிக்கு எம்.ஏ.சுமந்திரனே பொருத்தமானவர் என்ற தீர்மானம் நிறைவேற்றவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக அங்கத்தவர்கள் மத்தியில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், தலைவர் அதை மறுத்திருந்தார்.
தலைவர் மறுத்தாலும், தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் இந்த விவகாரத்தை கூட்டத்தில் பேச வைக்க அவர் சதித்திட்டம் தீட்டியுள்ளார் என ஏனைய அங்கத்தவர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.
இதன்படியே, கூட்டத்தின் போது சிலர், எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், சுமந்திரனை ஆதரிப்பதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.
ஏன் எம்.ஏ.சுமந்திரனை ஆதரிக்க வேண்டுமென மற்றையவர்கள் கேள்வியெழுப்பிய போது, சுமந்திரன் கல்முனைக்கு அடிக்கடி வருபவர் என்றும், கல்முனை வைத்தியசாலைக்கு ஜெனரேட்டர் ஒன்று வழங்கினார் என்றும் தெரிவித்தனர்.
கிழக்கிலிருந்து ஒருவர் போட்டியிடும் நிலைமையில் நாம் இப்படியான முடிவுகள் எடுக்கக்கூடாது, அது தவிர, தலைவர் தெரிவுக்கு காலம் உள்ளது, இப்படியான விவகாரங்களை பகிரங்கமாக கூட்டம் போட்டு தீர்மானிப்பதில்லையென ஏனைய- பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனினும், சுமந்திரனை ஆதரித்த தரப்பினர் அதை ஏற்காமல், அடுத்தடுத்த வாரத்தில் சுமந்திரன் கல்முனை வரும்போது, கூட்டத்தை கூடி ஆலோசிப்போம் என்றனர்.
இந்த நிலைமையில், கூட்டத்தை கூடி ஆலோசிப்பதற்கு தாம் தயார் என மற்றைய தரப்பினரும் கூறினர்.
ஆயினும், கூட்டம் முடிவில், எம்.ஏ.சுமந்திரனை ஆதரிக்கும் முடிவை எடுத்ததை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் செய்திகள் வெளியாகின. தலைவர் தரப்பினரே இந்த செய்தியை கசிய விட்டதாக ஏனையவர்கள் சந்தேகித்தனர்.
அவர்கள், உடனடியாக மறுப்பு தெரிவித்தனர். செயலாளரின் பெயரில் மறுப்பை வெளியிடப்பட்டது.
இதை தொடர்ந்து, கட்சி தலைவருக்கும் இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கட்சி தலைவர் தன்னிச்சையாக சுமந்திரன் ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், நாம் கல்முனை தொகுதியிலுள்ள வட்டாரக்கிளைகளை கூட்டி, சிறிதரன் ஆதரவு அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்துள்ளனர்.
இதனால், கட்சித் தலைமை திண்டாடிப் போயுள்ளது.