நெடுங்கேணி பிரதேசத்தின் வெடிவைத்த கல் பகுதியை அனுராதபுரத்துடன் இணைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை, வவுனியாவின் இனப்பரம்பலை சீர்குலைக்கும் அரசாங்கத்தின் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியென்பதை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்.
இன்று (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் அவர்களினுடைய பேச்சின்படி, மாகாண சபைத் தேர்தல் விடயமாக அவர் கூறிய விடயங்கள் – இரண்டு கட்சிகளுமே தேர்தல் நடாத்த வேண்டும் என்று பாராளுமன்றில் சொல்கிறார்கள்.
தேர்தல் நடத்துவதிலே இருக்கக் கூடிய பிரச்சினைகள் சம்பந்தமாக பேசப்படுகின்றது. எங்களுடைய உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஒரு தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார். பழைய முறையிலே சென்று தேர்தலை நடத்த முடியும் என்று. ஆகவே இந்த இரண்டு கட்சிகளையும் பொறுத்த மட்டில் இந்த மாகாண சபை என்பது ஒரு அதிகார போட்டிக்கான விஷயமாக இருக்கிறதே ஒழிய தமிழ் மக்களை பொறுத்த மட்டில் இது ஒரு முக்கியமான விடயமாகும். ஆகக் குறைந்தது சிறிதளவாவது நாங்கள் எங்களுடைய பகுதிகளில் இருக்கக்கூடிய விடயங்களை பார்ப்பதற்கான ஒரு சபையாக பார்க்கின்றோம்.
ஏனென்றால் எங்களுக்கு தெரியும் இந்த மாகாண சபை ஒரு முழுமையான தீர்வாக இருக்க முடியாமல் விட்டாலும் நிச்சயமாக அதனை நாங்கள் கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் பல தடவைகள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் . ஆகவே இப்போது கௌரவ பிரதமர் அவர்களும் எதிர்க்கட்சியிலே இருக்கின்றவர்களும் இதனை நடத்தத்தான் வேண்டும் என்று ஒப்புக்கொண்டிருக்கின்றனர். ஆகவே நாங்கள் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று வினயமாக கேட்கின்றோம்.
பிரதமர் அவர்கள் நான்கு மிக முக்கிய அமைச்சுக்கு பொறுப்பாக இருக்கின்றார். மிக முக்கிய அமைச்சுக்கள் நாட்டின் முழுமையான நிர்வாகத்துக்கு அது பொறுப்பாக இருக்கின்றது. பிரதமர் அவர்களைப் பொறுத்த மட்டில் அவர் ஒரு நீண்ட காலம் அதாவது நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பாராளுமன்ற அங்கத்தவராக இருந்திருக்கிறார். பல தடவைகள் அமைச்சராக இருந்திருக்கிறார். பல தடவைகள் அவர் அமைச்சராக இருந்த காலங்களில் எல்லாம் பல பிரச்சினைகளை கொண்டு செல்லுகின்ற போது அவர் அதனை கரிசனையாக கேட்டு முழுமையாக நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றார்.
அவரைப் பொறுத்த மட்டில் இந்த விஷயங்களிலே மிக கவனமாக நேர்மையாக யார் எந்த எதிர்க்கட்சியில் இருந்தால் என்ன? அதனை கொண்டு வந்தால் அதனை தீர்ப்பதில் மிக அக்கறையாக செயல்பட்டிருக்கிறார். எங்களுடைய பிரச்சினையிலும் நான் நேரடியாக எடுத்துச் சொன்ன பிரச்சினையை அவர் தீர்த்திருக்கிறார். நான் கட்டாயமாக அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுன்னாகத்தில் ஒரு தபால் கந்தோர் கட்டவேண்டும் என்ற மக்களினுடைய ஆர்வம் மிக நீண்டகாலமாக இருந்தது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலே கௌரவ மனோ கணேசன் அதற்கான நிதியை ஒதுக்கி அதற்கான அடிக்கல் 2019 ஆம் ஆண்டு நாடினார். அப்போது அரச அதிபராக இருந்த வேதநாயகம் அவர்கள் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அந்த ஒப்பந்தப்காரரிடம் 2019 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முடிவுற வேண்டும் என்று சொல்லி அந்த கட்டடத்தை முடிக்க கேட்டிருந்தார்.
ஆனால் அந்த கட்டடம் முடிவு பெறவில்லை. ஆனால் அது முடிவுற்றதாக அதற்கான சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கட்டடம் அப்படியே இருந்தது. வேலைகள் நடைபெறவில்லை. நான் இந்த பாராளுமன்றத்தில் அந்த பிரச்சினையை எடுத்த போது பிரதமர் அவர்கள் அதனை முடித்துத் தருவதாக உறுதி கூறினார். இப்போது அந்த கட்டடம் ஏறக்குறைய முடிந்து விட்டது. இன்னுமொரு சிறு அழகுபடுத்தும் வேலைகள் நடக்கின்றது. அதன் பிறகு அது திறக்கப்படும். அதற்கு எங்களுடைய சுன்னாகம் பகுதி மக்கள் சார்பாக நான் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
எப்படி மனோகணேசன் அதனை ஆரம்பித்தாரோ அதே போல பிரதமர் அவர்கள் அதை முடித்து வைத்திருக்கின்றார். இருவருக்குமே நான் நன்றி கூற வேண்டும். அதே போல உள்ளுராட்சி சபை தேர்தல்கள் நடைபெறாமல் 8 மாதங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பணமில்லை என்ற காரணம் கூ றப்பட்டிருக்கின்றது. அது வேற விஷயம். ஆனால் அந்த உள்ளூராட்சி சபையிலே வேட்பு மனு தாக்கல் செய்த பலர் அரச உத்தியோகத்தர்களாக இருக்கின்றார்கள். அதிகமானோர் வேலைக்கு போய்விட்டார்கள்.
ஆனால் பலருக்கு இன்னும் அவர்களினுடைய படிகள் கொடுக்கப்படவில்லை. பலர் இருக்கின்றார்கள் நான் வேண்டுமென்றால் அவர்களினுடைய விபரங்களை தர முடியும்.
தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த அனைவருக்கும் அவர்களினுடைய படிகள் கிடைப்பதற்கு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்கின்றேன்.
அதே போல இத்தகைய நடக்காத ஒரு தேர்தலுக்கு நிர்வாக செலவாக 940 மில்லியன் ரூபா செலவு செய்ததாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது.
இது நான் பத்திரிகையில் பார்த்த விஷயம். இவ்வளவு பொருளாதார நெருக்கடியில் வேட்பு மனுக்களை எடுப்பதற்காக 940 மில்லியன் ரூபாவை செலவு செய்வது என்பது ஒரு வீண் விரயமாக தான் நான் பார்க்கின்றேன். மிகப் பெரும் தொகையான பணம் விரையம் செய்யப்பட்டிருக்கிறது. பல சந்தர்ப்பத்திலே அரசியல்வாதிகள் விரயம் செய்கிறார்கள். ஊழல் செய்கிறார்கள். என்ற குற்றச்சாட்டுக்கள் தொகையாக வந்து கொண்டிருக்கும். இதில் பல அதிகாரிகள் செய்யும் ஊழல் விடயங்களினை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். இவற்றையும் நிச்சயமாக பிரதமர் அவர்கள் கவனிக்க வேண்டும்.
ஏனென்றால் அவர்களின் கீழே தான் முழுமையான அதிகார நிர்வாகம் இருக்கின்ற படியால் பிரதமர் அவர்கள் இந்த பொருளாதார மீட்சிக்கு செயல்பட்டு கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே பொருளாதார மீட்சி என்பது எல்லாருமே ஒத்துச் செய்ய வேண்டிய ஒரு விஷயம்.
சிலர் செய்கின்ற பிழைகளால் பொருளாதாரம் வீழ்ச்சியிடைந்து கொண்டிருக்கிறது என்பது நிச்சயமான ஒரு விஷயம்.
ளமாகாண சபையை பற்றி சொல்லி இருக்கிறோம். அதை நடத்துவதற்கான கட்டாயமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அடுத்ததாக இன்னொரு விஷயம் அம்பாறை மாவட்டத்திலே கல்முனை தமிழ் பிரதேச செயலகம் 2015 ஆம் ஆண்டு இப்போது ஜனாதிபதியாக இருக்கின்ற அன்று பிரதமராக இருந்த கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கணக்காளர்களை நியமிக்கப்போகிறோம் என்று தமிழ் கட்சிகளுக்கு உறுதியளித்தார். அப்போது வஜிர அபேவர்தன அவர்கள் அமைச்சராக இருந்தார். எத்தனை பேரை நியமிக்கப்போகிறர்கள் என்று. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளிக்கப்படும், பின்பு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று நியமிக்க கூடாது என்று கூற அது நியமிக்காமல் விடுபடும்.
மீண்டும் நாங்கள் செல்வோம். சென்று கதைக்கின்ற பொழுது நியமிக்கப்படும். பின் அதே முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் நியமிக்க வேண்டாம் என்று சொல்லும் போது நியமிக்கப்படாமல் விட்ட சந்தர்ப்பம் இருக்கிறது . அந்த சபை ஒழுங்காக நடக்காமல் இருக்கின்ற போது பல உப சபைகள் இருக்கின்றன. அதற்கு கணக்காளர் போடப்பட்டிருக்கிறது. பிரதேச அலுவலகம் தரமுயர்த்தப்படுகின்றது. மிக நீண்டகாலமாக தமிழர்கள் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். அதை செய்ய முடியாத நிலையிலே இந்த அரசாங்கம் இருக்கின்றது. வெறும் வாக்குக்களுக்காக. யாருடைய வாக்கு தேவை என்று நினைக்கின்றார்களோ அந்த வாக்கின் பக்கத்திலே நிற்கின்ற நிலைமை இந்த நாட்டிலே இருக்கின்றது. இதையும் பிரதமர் அவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
மேலும், வவுனியா நெடுங்கேணி பிரதேசத்திலே வெடி வைத்த கல்லு – அனுராதபுர மாவட்டத்தை சேர்ந்த ஒரு பகுதியை கொண்டு வந்து அதிலே இருக்க கூடிய கிராம நிர்வாகிகள் உடன்சேர்ந்து அதிலே இருக்கக்கூடிய கிராம நிர்வாகத்துடன் சேர்க்கப்பட்டிருக்கிறது.
அந்த கிராமத்திலிருந்து நெடுங்கேணி பிரதேசசபைக்கு 30 கிலோ மீற்றர் காட்டுப்பாதையால் வரவேண்டும். அந்த மக்களே எழுதிக்கொடுத்திருக்கிறார்கள் அந்த அனுராதபுர மக்களே எழுதி கொடுத்திருக்கின்றார். பிரதேச சபையிலே தங்களை விட்டு விடுங்கள் மீண்டும் அனுராதபுரத்துக்கு போக வேண்டும் என்று. அதை செய்வதற்கு இந்த அரசு தயங்குகிறது. ஏனென்றால் அங்கே ஒரு திட்டம் இருக்கின்றது. நீண்டகாலமாக அந்த திட்டத்தை உருவாக்க பார்க்கிறார்கள்.
போகஸ்வேவ என்ற இடத்திலே ஏற்படுகின்ற குடியேற்றம். இந்த குடியேற்றத்தின் மூலம் பக்கத்துக்கு அனுராதாதபுரத்திற்குள்ள நிலங்களை சேர்ப்பது, அதிலிருக்கக்கூடிய மக்களை சேர்ப்பது வெளி மாவட்டத்திலிருந்து மக்களை குடியேற்றுவது, இதன் மூலம் வவுனியா மாவட்டத்துக்குரிய குடிப்பரம்பலை மாற்றுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.
இந்த முயற்சிகள் எல்லாம் எடுத்துக்கொண்டு ஒரு பொருளாதார வளர்ச்சியை பற்றி பேசுவது நிச்சயமாக நடைமுறைக்கு சரிவராது.
ஏனென்றால் தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் முழுமனதுடன் இந்த செயல்பாடுகளில் பங்கு பற்ற வேண்டும். அவர்கள் முழு மனதுடன் செயல்பாடுகளில் பங்குபற்றுவதாக இருந்தால் அவர்கள் சரியான முறையிலே நடாத்தப்பட வேண்டும். அவர்களின் அரசியல் அபிலாசைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இதை நிச்சயமாக அரசாங்கம் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.