உலக மக்கள் முன்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசியதற்கு பின்னால் பிரபாகரன் இருக்கிறார் என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும், அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமில்லாது, உலக அளவில் பேசுபொருளானது.
இந்நிலையில், மாவீரர் நாளில் (27) பிரபாகரனின் மகள் துவாரகா காணொலி வாயிலாக பேசுவார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
சுவிஸ், பிரித்தானியாவிலுள்ள முன்னாள் போராளிகளான பண மோசடி கும்பல் ஒன்று இந்த போலி நாடகத்தை அரங்கேற்றி வருவது உறுதியாகிய நிலையில், நெடுமாறன் இந்த உண்மைகளை அறியாமல் பேசியிருந்தார். நெடுமாறன் உள்ளிட்ட பலருடன் துவாரகா என கூறும் பித்தாலாட்ட பெண் தொலைபேசியில் பேசியிருந்தார்.
அதன்படி, நேற்று மாலை பித்தலாட்ட துவாரகா பேசியதாக காணொலியில் நேற்று ஒரு வீடியோ வெளியானது.
அதில் அவர் பேசியதாவது:
எத்தனையோ ஆபத்துகள், நெருக்கடிகள், சவால்கள், துரோகங்களை கடந்தே இன்று உங்கள் முன்னால் நான் பேசுகிறேன். அதேபோல, ஒரு நாள் தாயகம் திரும்பி அங்கு எங்களது மக்களுடன் இருந்து, அவர்களுக்கு பணி செய்வதற்கு காலம் வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
எங்களுடன் தனித்து நின்று போர் புரிய திராணியற்ற சிங்கள அரசு, சக்தி வாய்ந்த நாடுகளை வளைத்து தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டது.
போர் நிகழ்ந்த பகுதிகளில் ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஊட்டிய உலகின் சக்தி வாய்ந்த நாடுகள், ஐ.நா மன்றம் இன்று வரை எங்களுக்கு தீர்வை வழங்கவில்லை. எங்களது மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், எமது சுதந்திரத்துக்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடு தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதனிடையே, தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நேற்று மாலை மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார்.
பேரமைப்பின் செயலாளர்கள் தமிழ்மணி, ஜான்.கென்னடி, துணைத் தலைவர்கள் அய்யனாபுரம் முருகேசன், சா.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வின்போது, போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு மெழுகுவத்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அப்போது, பழ.நெடுமாறன் பேசியதாவது:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா, மாவீரர் நாளில் இணையம் வழியாக உரையாற்றியிருக்கிறார். இது பிரபாகரன் எத்தகைய திட்டத்தை மேற்கொள்ள இருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
பிரபாகரன் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் அழிந்து போனதாக கூறினார்கள். இப்போது அவரது மகள் வந்து உலக மக்கள் முன்பாக பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை அவராக வந்து செய்திருக்க முடியாது. பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் என்பது தான் உண்மை. இளவேங்கை உறுமியிருக்கிறது. சினவேங்கை விரைவில் உறுமும்.
இந்த உரையை கேட்ட மக்கள் எல்லோருக்கும் ஓர் எழுச்சியும், நம்பிக்கையும், புத்துணர்வும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.
முன்னதாக, பித்தலாட்ட துவாரகா பேசியதாகக் கூறப்படும் வீடியோ அங்கு ஒளிபரப்பப்பட்டது.