ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் காரை வழிமறித்த பெண் மீது, போலீஸார் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றவர். இவரது பிறந்த தினமான நவம்பர் 15ஆம் தேதி பழங்குடியினர் பெருமை தினமாக கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் குந்தி நகரில் உள்ள பிர்சா முண்டா அருங்காட்சியகத்தில் அவரது சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 15-ம் தேதி மாலை அணிவித்தார். மேலும் பிர்சா பிறந்த கிராமத்துக்குப் பிரதமர் மோடி சென்று மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, ராஞ்சியின் ரேடியம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் நின்றிருந்த பெண் ஒருவர் திடீரென புகுந்து பிரதமரின் காரை வழிமறித்தார். அந்த பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
விசாரணையில் அந்தப் பெண் ணின் பெயர் சங்கீதா ஜா என தெரிந்தது. கோத்வாலி காவல் நிலையத்துக்கு அழைத்து செல் லப்பட்ட சங்கீதா மீது அச்சுறுத்தல் ஏற்படுத்தியது உட்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீஸார் சங்கீதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.