அடுத்த வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு விண்ணப்பித்த முல்லைத்தீவு கோம்பாவில் பாடசாலை மாணவர் ஒருவரை பரீட்சை எழுத அனுமதிக்க முடியாது என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவரின் பெற்றோர் நேற்று முன்தினம் (8) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பங்களை அனுப்பிய நிலையில் தமது மகனுக்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முல்லைத்தீவு அலுவலகத்தில் இந்தப் பெற்றோர் சமர்ப்பித்த முறைப்பாட்டில் தெரிவிக்கின்றனர்.
இதனால் 42 நாட்களாக தமது மகன் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மருத்துவ அறிக்கைகள் பாடசாலையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலைமை இருந்தும், தன் மகனை பரீட்சை எழுத அனுமதிக்க முடியாது என பாடசாலை நிர்வாகம் முடிவு செய்தது.
இந்த மாணவரின் மூத்த சகோதரி இரண்டு வருடங்களுக்கு முன்னர் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 167 புள்ளிகளைப் பெற்றிருந்தார். இம்முறை பரீட்சைக்கு முகம்கொடுக்கவுள்ள மாணவர் இதுவரை பாடசாலை நடத்திய பரீட்சை பயிற்சி வினாத்தாள்களில் 70 வீதத்துக்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இது மிகவும் அநியாயமான முடிவாகும் எனவும், தமது மகனை அடுத்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சை எழுத அனுமதிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதாகவும், மாணவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால், தலையிட்டு தீர்வு வழங்குவதாகவும் தெரிவித்தனர்.