ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாஃப்டருக்கு சொந்தமான இரண்டு உள்ளூர் தனியார் காப்புறுதி நிறுவனங்களின் காப்புறுதி கொடுப்பனவுகளை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய நேற்று (8) உத்தரவிட்டுள்ளார்.
‘Fairfirst’ மற்றும் ‘Janashakthi’ ஆகிய இரண்டு காப்புறுதி நிறுவனங்களின் தலைவர்களுக்கு நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
காப்பீட்டு இழப்பீடு பெறும் தரப்பினர் இறந்தவரின் மனைவி அல்லது குழந்தைகளைத் தவிர வேறு மூன்றாம் தரப்பினராக இருந்தால், அது சந்தேகத்திற்குரியதாக இருக்கும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் காப்புறுதிக் கொடுப்பனவை இடைநிறுத்துமாறு சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்..
பிரேரணையை முன்வைத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொலை செய்யப்பட்ட ஷாஃப்டர், உள்ளூர் காப்புறுதி நிறுவனங்களுக்கு மேலதிகமாக வெளிநாட்டு காப்புறுதி நிறுவனங்களிடமிருந்தும் ஆயுள் காப்புறுதியைப் பெற்றுள்ளதாகத் தகவல் உள்ளதாக நீதிமன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு உயிரிழந்தவரின் தந்தை சந்திரா ஷாஃப்டர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.