இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்ட களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் நிலாந்தி டி சில்வா, பல்கலைக்கழகப் பதிவாளர் கே.கே.தர்மதிலக ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
பிரதிவாதி சார்பில் ஆஜரான சரத் ஜயமான்ன முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதவான் இந்த தீர்மானத்தை வழங்கினார்.
பேராசிரியர் பிரசாந்தி நாரங்கொட சமர்ப்பித்த முறைப்பாட்டின் பிரகாரம், தகவல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர் தொடர்பான ஆரம்ப விசாரணை அறிக்கையை வழங்காமல் ஆணைக்குழுவின் உத்தரவை மீறியதாக குற்றம் சுமத்தி பிரதிவாதிகளுக்கு எதிராக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் முதற்கட்ட ஆட்சேபனைகளை முன்வைத்த பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளின் பிரகாரம் வழக்குத் தொடர ஆணைக்குழுவுக்கு மாத்திரமே உரிமை உண்டு எனத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான வழக்கை தாக்கல் செய்வதற்கு பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயமான்ன தனது ஆரம்ப ஆட்சேபனைகளில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்த வழக்கை தொடர முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரம் நிறுவனங்களுக்கே தவிர தனிநபர்களுக்கு அல்ல எனவும், இந்த இரண்டு பிரதிவாதிகளும் சட்டவிரோதமான முறையில் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அடிப்படை ஆட்சேபனைகளை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இவ்வாறான வழக்கை உரிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ பெயர் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரையின் கீழ் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தார்.
குறித்த சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் எனவே இந்த வழக்கை தொடர முடியாது என்பதால் பிரதிவாதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ பெயர் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரையின் கீழ் மீண்டும் வழக்குத் தொடரப்படுவதை இந்தத் தீர்ப்பு தடுக்காது என்று நீதவான் மேலும் கூறினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டு நிராகரிக்கப்பட்ட முதல் வழக்கு இது என்று சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.