இலங்கை கிரிக்கெட் இடைக்காலசபைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதியின் செயற்பாடு குற்றப்பிரேரணைக்குரியது என தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஸ்மன் கிரியெல்ல.
இன்று (9) நாடாளுமன்றத்தில் இலங்கை கிரிக்கெட் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
இலங்கை கிரிக்கெட் இடைக்காலசபைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதியின் (பந்துல கருணாரத்ன) செயற்பாடு குற்றப்பிரேரணைக்குரியது. இது தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடல் நடத்தி தீர்மானம் எடுப்போம். இலங்கை நீதித்துறையில் 99 விதமானவர்கள் நேர்மையானவர்கள். ஓரிரண்டு பேர் இவ்வாறு பிரச்சினைக்குரியவர்கள். இலங்கையில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் இவ்வாறானவர்கள் இருக்கலாம். அனைவரும் மனிதர்களே.
இலங்கை கிரிக்கெட் ஊழல் நிறைந்ததென்பது இலங்கையிலுள்ள அனைவருக்கும் தெரியும். அந்த நீதிபதிக்கு மட்டும் அதை தெரியாதென கூற முடியாது. அந்த நீதிபதி வழங்கியது தவறு. அந்த தவறான தீர்ப்பினால்தான் அந்த ஊழல்வாதிகள் மீண்டும் கிரிக்கெட் நிறுவனத்துக்குள் வந்து பணத்தை சூறையாடுகிறார்கள்.
இலங்கை கிரிக்கெட் நிறுவன ஊழல் பற்றி ஓகஸ்ட்டில் ஒருநாள் விவாதம் நடத்தினோம். ஆனால் அதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் நடப்பதை நீதித்துறை அறியாமலிருக்க முடியாது. இங்கிலாந்தில் ஜூடிசியல் நோட்டிஸ் என்ற பாரம்பரியமுள்ளது. பாராளுமன்றத்தில் நடப்பது பற்றிய புரிதல் நீதித்துறையில் இருப்பவர்களிற்கு இருக்க வேண்டும்.
கிரிக்கெட் நிர்வாக தெரிவில் 140 பேர் வாக்களிக்கிறார்கள். அவுஸ்திரேலியாவில் 10 பேர் தான் தெரிவு செய்கிறர்கள். இந்தியாவில் 20 பேர்தான் அதை செய்கிறார்கள். இங்கிலாந்தில் 25 பேர் அதை செய்கிறார்கள். ஆனால் இலங்கையில் 140 பேர் வாக்களிக்கிறார்கள். அந்த கழகங்களில் பல கிரிக்கெட் விளையாடுவதேயில்லை. வாக்களிப்பதற்காக மட்டும் செயற்படுகின்றன.