சீனி மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு குறித்த பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்படுவதற்கு முன்னரே வர்த்தகர்களுக்கு எவ்வாறு தகவல் கிடைத்தது என்பது கேள்விக்குரியது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வரி திருத்தம் தொடர்பில் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு மாத்திரமே தெரியும். வரி அதிகரிப்பு குறித்து எந்த தரப்பினருக்குத் தெரியும் என்றும் கேள்வி எழுப்பிய அவர், வெளியாட்களுக்கு தகவல் கசியவிடப்பட்டதா என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“சீனி மோசடி தொடர்பாக நாங்கள் அன்று குரல் எழுப்பினோம், இன்றும் மோசடி நடந்தால் தொடர்ந்து குரல் எழுப்புவோம். மோசடி அல்லது தவறு நடந்தால் வாயை மூடிக் கொண்டிருக்க மாட்டோம். இங்கே என்ன நடந்தது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
வரி அதிகரிப்பு முடிவு குறித்த தகவல் தொழிலதிபர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதுதான் இங்கு உண்மையான பிரச்சினை. உண்மையைச் சொல்வதென்றால், வரியை உயர்த்தும் முடிவை அமைச்சரவை உறுப்பினர்கள் கூட அறிந்திருக்கவில்லை.
சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இது தெரியும், இந்த தகவல் அந்த தொழிலதிபர்களுக்கு எப்படி கசிந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவதற்கான அமைச்சரவை முடிவு கூட கசிந்துவிட்டது, சிலர் அதைத் தொடர்ந்து நன்மைகளைப் பெறவும், அவர்களின் கோரிக்கைகள் சம்பள உயர்வுக்கு வழிவகுத்தது என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் சிலர் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி எதிர்ப்பு தெரிவித்தனர், .
மேலும் அரசாங்கம் வரி விதிக்க முடிவு செய்தவுடன், சில வணிகர்கள் அந்த பொருட்களை இறக்குமதி செய்கிறார்கள். அரசாங்கம் வரிகளை குறைக்க முடிவு செய்யும் போது, அதே குழு அந்த குறிப்பிட்ட பொருட்களை மறைக்கிறது. இந்தத் தகவல் அந்தத் தொழிலதிபர்களை எப்படிச் சென்றடைகிறது என்பதுதான் நாம் விடை காண வேண்டிய கேள்வி. அமைச்சரவையில் இருந்து தகவல்கள் கசிந்துவிடாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என்று அமைச்சர் கூறினார்.
“இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். வரி மாற்றங்களால் எப்போதும் லாபம் ஈட்டும் குழு உள்ளது. அதனால்தான் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை ஜனாதிபதி நிர்ணயித்தார். அந்த முடிவினால் இந்த வரி அதிகரிப்பின் மூலம் இலாபம் ஈட்ட முடியாது” என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.