‘இரா.சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டும்’ என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் பூகம்பம் வெடிக்கும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போதைய நிலையில் எந்த சச்சரவும் ஏற்படாது என அறிய முடிகிறது.
சுமந்திரனின் கருத்தினால் அதிருப்தியடைந்த இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘சுமந்திரன் மீது நடவடிக்கையெடுக்க வேண்டும், இந்த கருத்தை அனுமதிக்க முடியாது, உடனடியாக கொழும்பு வந்து என்னை சந்தியுங்கள்’ என அழைத்திருந்தார்.
இதனடிப்படையில் நேற்று முன்தினம் மாலையில் இரா.சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தினார் மாவை.
இந்த சந்திப்பின் போது, சுமந்திரனின் கருத்து தொடர்பில் இரா.சம்பந்தன் மிகவும் மனம் நொந்து பேசியதாக அறிய முடிந்தது. சுமந்திரனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவரை அரசியல் ரீதியாக வளர்த்து விட, இப்படி பேசிவிட்டாரே என குறிப்பிட்டுள்ளார்.
இன்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளது. இதன்போது, சுமந்திரன் விவகாரம் தீவிரமாக ஆராயப்படும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போதைய நிலையில், அவ்வாறு நடைபெறாது என அறிய முடிகிறது.
சுமந்திரன் விவகாரத்தை ஊடகங்களுக்கு தீனியாக்கி, அதிக முக்கியத்துவமளிக்க வேண்டாமென இரா.சம்பந்தன், மாவையிடம் கூறியதாக விடயமறிந்த ஆதாரமொன்று தமிழ்பக்கத்திடம் தெரிவித்தது.
இதனை கருத்தில் கொண்டு, சுமந்திரன் விவகாரத்தில் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை என தெரிய முடிகிறது.
இதேவேளை, மத்திய செயற்குழு கூட்டத்தில் சுமந்திரன் விவகாரத்தை யாரும் எடுத்தால், அது ஆராயப்படும்.சுமந்திரன் விவகாரம் பற்றி ஏதாவது நடவடிக்கையெடுக்கப்படுமா இல்லையா என்பது மத்தியகுழுவில் உள்ளவர்கள் வலியுறுத்துவதை பொறுத்ததே.
அதற்கும் வாய்ப்பில்லையென்றே தெரிகிறது. ஏனெனில், இலங்கை தமிழ் அரசு கட்சி மத்தியகுழுவில் 50 பேரளவில் இருந்தாலும், அதில் உள்ளவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே, கட்சிக்குள் நடக்கும் விவகாரங்களில் துணிச்சலாக குரல் கொடுக்கக்கூடியவர்கள்.
இந்த பட்டியலில் உள்ள மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் எம்.பிக்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் போன்றவர்களே. ஆனால் அவர்கள் யாரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஞா.சிறிநேசனின் தாயாரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும்.
இவர்களை தவிர்த்தால், தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் துணிச்சலாக குரல் கொடுக்கக்கூடியவர்கள் மிக அரிதே. சாள்ஸ் நிர்மலநாதன் போன்ற ஓரிருவரே உள்ளனர். சிறிதரன் எம்.பி மேடைகளில் கொந்தளித்து பேசினாலும், அவரையெல்லாம் இப்படியான கூட்டங்களில் சுமந்திரன் “லெப்ட் ஹாண்டினால் காண்டில் பண்ணுவார்“ என்பதே நிலைமை.
இதனால், இன்று சுமந்திரன் விவகாரத்தில் பெரியளவிலான தீர்மானங்கள் எதற்கும் வருவதற்கு வாய்ப்புக்குறைவு.