விலை உயர்ந்த பைக்குகளில் அபாயகரமாக பைக்குகளை ஓட்டி, யூடியூப் சானல் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் motovlogger டிடிஎஃப் வாசன். சர்ச்சைகளுக்கும் வழக்குகளுக்கும் பெயர்போன டிடிஎஃப் வாசன், அண்மையில் காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக சென்று வீலிங் செய்ய முற்பட்டபோது கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு அங்கேயும் ‘செக்’ காத்திருந்தது. தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறிய நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், டிடிஎப் வாசனின் youtube கணக்கை மூடிவிட்டு அவரது பைக்கை எரித்து விடவேண்டும் எனவும் காட்டமான கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அடுத்த அதிரடியாக, டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார். 2033ஆம் ஆண்டு வரை அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. யூடியூபில் 40 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ், ஏராளமான ரசிகர்கள் மற்றும் நண்பர்களை கொண்டுள்ள டிடிஎஃப் வாசனுக்கு யாரும் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க முன்வராத நிலையில், அவரது தாய் அளித்த உத்தரவாதத்தால் ரிலீஸ் ஆனார்.
இந்நிலையில் 46 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்தில் கைபோனதைவிட லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதற்குத்தான் தான் கண் கலங்கியதாகத் தெரிவித்தார்.
லெசென்ஸ் ரத்து உத்தரவு தன்னைத் திருத்தும் நோக்கில் பிறப்பிக்கப்படவில்லை எனவும் தன்னை அழிக்கும் நோக்கில் அந்த உத்தரவு இருப்பதாகவும் கூறினார். சர்வதேச ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிப்பது அல்லது ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வது ஆகிய நடவடிக்கைகளில் தான் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விபத்தில் எலும்பு முறிந்ததால் தனது கை கோணலாகிவிட்டதாக தெரிவித்த அவர், அதிக விலையுடைய பைக்கை குழந்தைகளை கேட்டால், அவர்களை கண்டித்து, பெற்றோர்தான் திருத்தவேண்டுமே தவிர, தான் ஒன்றும் செய்யமுடியாது என்றார்.