கணுக்காலில் ஏற்பட்ட காயம் குணமடையாமல் இருப்பதால் உலகக் கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்தியாவில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 7வது போட்டியிலும் வென்று இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சொந்த மண்ணில் உலகக் கோப்பையை எதிர்க்கொள்ளும் இந்திய அணி ஜடேஜா, ஹர்திக் பாண்டியா என 2 சகலதுறை வீரருடன் களமிறங்கியுள்ளது. இதில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17வது லீக் போட்டியின் போது ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார். போட்டியின் போது பந்தை காலால் தடுக்க முயன்ற ஹர்திக் பாண்ட்யா, கால் தவறி கீழே விழுந்தார்.
இதனால் அவரது காலில் காயம் ஏற்பட்ட நிலையில், கடந்த 2 வாரங்களாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கணுக்காலில் ஏற்பட்ட காயம் குணமடையாமல் இருப்பதால் உலகக் கோப்பையி தொடரில் இருந்தே ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து அவர் தன்னுடைய சமுக வலைதள பக்கத்தில், “உலகக் கோப்பையின் மீதமுள்ள போட்டிகளை நான் மிஸ் செய்வேன் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஒவ்வோர் ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் அவர்களை உற்சாகப்படுத்தி, உற்சாகத்துடன், அணியுடன் இருப்பேன். அனைவரின் வாழ்த்துகளுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி. எனக்கு இந்த அணி மிகவும் ஸ்பெஷல். நிச்சயமாக அனைவரையும் பெருமைப்படுத்துவோம் என நம்புகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.