வவுனியா, போகஸ்வெவ பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள மக்கள் இன்று வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் “ஒரே கிராமம் ஒரே நாடு“ கலந்துரையாடல் நடந்த போது, இந்த போராட்டம் இடம்பெற்றது.
வடக்கு சிங்கள மக்கள் ஒன்றியம் என குறிப்பிட்ட பதாதைகளை தாங்கியவாறு மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கு தனியான பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும், கமநலசேவைகள் நிலையம் அமைக்கப்பட வேண்டும், விவசாய நிலம் வழங்க வேண்டும், கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் 6 பேர் அழைக்கப்பட்டு, பிரதமருடன் கலந்துரையாட அனுமதிக்கப்பட்டனர்.
தென்னிலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த- வழக்குகளில் தொடர்புபட்டவர்கள் உள்ளிட்டவர்கள்- போகஸ்வெவவில் குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேட்டு நிலம், வயல் நிலங்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதும், இதுவரை வயல் நிலங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன், அந்த குடியேற்ற திட்டத்துக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை, தமிழ் மக்களின் இனப்பரம்பலை சிதைக்கும் நோக்கத்துடன் இந்த விதமான குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-வவுனியா நிருபர் ரூபன்-