தனது மனைவியையும் ஏழு வயது பிள்ளையையும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, பேருந்திலும் நடைபயணமாகவும் பல இடங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற 38 வயதுடைய இராணுவ சார்ஜன்ட் ஒருவரை திங்கட்கிழமை (23) ஹசலக பொலிஸார் கைது செய்தனர்.
இந்த இராணுவ சார்ஜன்ட் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தம்புள்ளை லெனடோர பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.
சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை (22) தம்புள்ளையில் உள்ள வீட்டில் இருந்து தனது குடும்பத்தை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளதாக ஹசலக்க காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதலில் தனது மனைவியையும் பிள்ளையையும் தம்புள்ளையில் இருந்து கண்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இவர்களை பாதயாத்திரையாக பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பின்னர் திங்கட்கிழமை (23) கண்டியில் இருந்து பஸ் மூலம் ஹசலக்கவுக்கு அழைத்து வந்துள்ளார்.
இது குறித்து சார்ஜன்ட்டின் மனைவி ஹசலக்க பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் கூறியதையடுத்து, இந்த இராணுவ சார்ஜன்ட் கைது செய்யப்பட்டு அவரது பிடியில் இருந்து அவரது மனைவியும் குழந்தையும் விடுவிக்கப்பட்டனர். அவரது குடும்பத்தினரை மிரட்ட பயன்படுத்திய கத்தியும் கைப்பற்றப்பட்டது.
அப்போது அவர்கள் 100 கிலோமீட்டர் தூரம் பயணித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நுவரெலியாவில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இந்த இராணுவ வீரர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என தெரியவந்துள்ளது.
சமீபகாலமாக உரிய சிகிச்சை அளிக்காததால் இந்த நிலைக்கு வந்துள்ளதாக தெரிகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சார்ஜென்டை மஹியங்கனை நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிகிச்சைக்காக மனநல வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கோரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.