ஒய்வு பெற்ற பெண் அதிபர் ஒருவர் அரச வங்கியின் நான்கு கிளைகளில் இருந்து 26 சந்தர்ப்பங்களில் 42 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) பொது முறைப்பாடு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிந்தகல பிரதேசத்தில் வசிக்கும் 69 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபரே கைதாகினார்.
இந்த கடன் திட்டம் ஆசிரியர்களுக்கு மட்டுமே கடன் வழங்குகிறது. விண்ணப்பதாரர் பணிபுரியும் பாடசாலையின் அதிபரால் தொடர்புடைய ஆவணங்களின் சான்றளிக்கப்பட வேண்டும்.
இந்த ஓய்வுபெற்ற அதிபர் தற்போது அதிபராக கடமையாற்றுவதாக போலி முத்திரைகள் மற்றும் ஆவணங்களை தயாரித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கான பிரத்தியேகமான மேற்கண்ட சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் ஆசிரியர் அல்லாதவர்களுக்கு கடன் வசதிகளை ஏற்பாடு செய்ய போலி ஆவணங்களைப் பயன்படுத்தினார்.
ஓய்வு பெற்ற அதிபர் தயாரித்த போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஆசிரியர் அல்லாத 26 பேர் இவ்வாறு கடன் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடன் பெற்றவர்களிடம் கமிஷன் பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் கடன் வாங்கிய 26 பேரும் முறையாக தவணை செலுத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியை சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரி கண்டுபிடித்தார். இது தொடர்பாக வங்கி சி.ஐ.டியிடம் முறைப்பாடு செய்துள்ளது.