பிரான்ஸூக்கு செல்வதற்காக முகவர் ஒருவரை நம்பி சென்ற யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த ஒருவர் லெபனான் நாட்டின் சிறையில் உள்ளதாகவும் அவரை மீட்டு நாட்டுக்கு கொண்டுவர உதவுமாறும் குடும்பத்தினரால் உருக்கமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் சயந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே முகவரை நம்பி ஏமாந்துபோய் லெபனான் நாட்டின் சிறையில் சிக்கியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவரது மனைவி, பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று லெபனான் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக இருந்த போது உரிய ஆவணங்கள் இல்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு லெபனான் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.
குடும்ப வறுமை காரணமாக பிரான்ஸ் செல்வதற்காக எனது கணவர் கடந்த ஜுன் மாதம் இலங்கையில் இருந்து புறப்பட்டார். ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில் லெபனான் நாட்டின் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லெபனான் அருகில் உள்ள இஸ்ரேல் நாட்டில் யுத்தம் இடம்பெறுவதால் எமக்கு பயமாக உள்ளது. குடும்ப வறுமை என்றாலும் எனது கணவர் எனக்கு முக்கியம். எனது கணவரை நாட்டுக்கு கொண்டுவர உரிய தரப்புக்கள் உதவ வேண்டும் என்றார்.