உலக கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் 229 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 20ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரொஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 399 ரன்களைச் சேர்த்தது. இதில் ஹென்ரிச் கிளாசன் 109 ரன்களை குவித்து மிரட்டினார். ரீசா ஹென்ட்ரிக்ஸ் 85, மார்கோ ஜான்சன் 75, ரஸ்ஸி வான் டெர் டுசென் 60 ரன்களை குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர்.
400 என்ற இமாலய இலக்கை விரட்ட களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஜானி பேர்ஸ்டோவ் 10 ரன்களிலும், ஜோ ரூட் 2 ரன்களிலும், டேவிட் மாலன் 6 ரன்களிலும், பென்ஸ்டோக்ஸ் 5 ரன்களிலும் அவுட்டாக 10 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது இங்கிலாந்து.
அடுத்து வந்த வீரர்களின் பொறுப்பின்மையால் 12வது ஓவரில் ஜோஸ் பட்லர், ஹாரி புரூக் அடுத்தடுத்து விக்கெட்டாகினர். தொடர்ந்து அடில் ரஷித் 10 ரன்கள், டேவிட் வில்லே 12 அவுட்டாக 18வது ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து 118 ரன்களை மட்டுமே சேர்த்தது. மார்க் வூட் களமிறங்கி 5 சிக்சர்களை விளாசி அதிரடி காட்டியது மட்டும் ஆறுதல். கஸ் அட்கின்சன் 35 ரன்களில் கிளம்ப, அடுத்து வந்த ரீஸ் டோப்லி காயம் காரணமாக ஆடாமல் வெளியேறினார். இதையடுத்து 22 ஓவர்களிலேயே 170 ரன்களுடன் சுருண்டது இங்கிலாந்து. இதனால் 229 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது.
தென்னாபிரிக்க அணி தரப்பில், ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன், லுங்கி இங்கிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கேசவ் மகாராஜ், ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.