மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க, பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க கோஷங்கள் எழுப்பினர்.
அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்ட பிறகு, சக்தி பீடத்திலுள்ள தியான மண்டபத்துக்கு அவரின் உடல் எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர், பங்காரு அடிகளார் அருள்வாக்கு சொன்னபடி, கோயில் கருவறைக்கும், புற்று மண்டபத்துக்கும் நடுவில் நின்ற நிலையில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த இடத்தில்தான் முதலில் அவர் அருள்வாக்கு சொன்னார் எனக் கூறப்படுகிறது. அதனால், அந்த இடத்தில்தான் நல்லடக்கம் செய்ய வேண்டும் என பங்காரு அடிகளார் ஏற்கனவே அருள்வாக்கில் கூறியதாக சொல்லப்படுகிறது.
பங்காரு அடிகளாரின் உடல், சித்தர் முறைப்படி பால், பன்னீர், சந்தானம், குங்குமம், மஞ்சள், இளநீர் கொண்டு உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வில்வம், துளசி, வேப்பிலை, மஞ்சள், குங்குமம், சவ்வாது, உப்பு, விபூதி போடப்பட்டு உட்கார்ந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் தமிழக அரசு சார்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன், ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, 3 முறை வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை செலுத்தினர்.
நல்லடக்கத்தையொட்டி மேல்மருவத்தூர் சக்தி பீடத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால், பக்தர்களின் பாதுகாப்புக்கு காவல் துறையினர் அதிக எண்ணிக்கையில் மேல்மருவத்தூர் சக்தி பீடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்காரு அடிகளார் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னணி
விழுப்புரம் மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தில் கோபால நாயக்கர் – மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக கடந்த 1941 மார்ச் 3ஆம் திகதி பிறந்தார் பங்காரு அடிகளார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் சுப்பிரமணி. மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துப்பாக்கம் அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்து, செங்கல்பட்டு அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றார். பின்னர், அச்சிறுப்பாக்கம் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.
சிறுவயது முதலே ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த இவர், வேப்பமரத்தின் அடியில் குறிசொல்லி வந்தார். இவரை அம்மனின் அருள்பெற்றவராக பக்தர்கள் வணங்கி வந்தனர்,
இந்த நிலையில், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1970ஆம் ஆண்டு நிறுவினார். கோயில் கருவறைக்கே சென்று பெண்கள் நேரடியாக வழிபாடு செய்யும் முறையை ஏற்படுத்தினார். மாதவிலக்கு நாட்களிலும் இங்கு தடையின்றி வழிபடலாம் என்பது, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திமாலை அணிந்து, இருமுடி சுமந்து மேல்மருவத்தூர் வந்து ஆதிபராசக்தி அம்மனை வழிபடத் தொடங்கினர். சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூர் வந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று வந்தனர். பக்தர்களால் ‘அம்மா’ என்று மிகுந்த அன்போடு அழைக்கப்பட்டார் பங்காரு அடிகளார்.
ஆதிபராசக்தி என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவினார். இதன்மூலம், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அறக்கட்டளை மூலம் சுற்றுப்புற கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சிலநாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பங்காரு அடிகளார் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை உடல்நலம் மிகவும்பாதிக்கப்பட்டதால் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிற்பகலில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட பங்காரு அடிகளார் மாலை 5 மணி அளவில் மறைந்தார்.