யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் உள்ள புடைவைக் கடை ஒன்றில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி பணத்தைக் கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தேடப்பட்டு வருகின்றார்.
நேற்று (18) கந்தர்மடம் சந்தியிலுள்ள கடையொன்றிற்குள் நுழைந்த 3 பேர் தங்களை பொலிஸ் புலனாய்வாளர்கள் என குறிப்பிட்டு, அந்தக் கடையில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை செய்யப்படுகின்றது என்று தகவல் கிடைத்துள்ளது என்றும் தேடுதல் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
கடைக்குள் நுழைந்த அவர்கள் அங்கு தேடுதல் நடத்தியுள்ளனர். கடை உரிமையாளரின் அடையாள அட்டையையும் பறித்துள்ளனர்.
பொலிசார் எனில் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறியபோது, அவரது கழுத்தில் கத்தியை வைத்து கடையில் இருந்த 23 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு, கடையிலிருந்தவர்களை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட விசாரணையில், இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் ரியோ ஐஸ்கிறீம் கடைக்கு அண்மையில் ஒருவரும், யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு அருகில் மற்றவரும் கைது செய்யப்பட்டவர். 24, 28 வயதான இருவரே கைதாகினர். அவர்கள் நல்லூரடி, யமுனாஏரி பகுதியில் வசிப்பவர்கள்.
கைதான ஒருவர் 6 மாத சிறைத்தண்டனை முடித்து, கடந்த வாரமே விடுதலையாகியிருந்தார்.
இந்த குழுவினர் கடந்த 3 மாதங்களாக நல்லூரடி, பரமேஸ்வரா சந்தி, கந்தர்மடம் பகுதிகளில் தொடர் திருட்டுக்களிலும், வழிப்பறியிலும் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்களை மிரட்டி கைத்தொலைபேசிகளை பரிசோதிப்பது, கைத்தொலைபேசியில் சகோதரிகளின் புகைப்படங்கள் இருந்தால் அதை வைத்து மிரட்டி பணம் பறிப்பது, சிறிய கடைகள், பயணிகளிடம் கைத்தொலைபேசி, பணம் பறிப்பது என தொடர் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி பலர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.
இந்த பகுதிகளில் திருடர்களால் பாதிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும்.



