மலையகம் 200 ஐ முன்னிட்டு ‘நாம் 200’ என தான் பிரிதநிதித்துவம் செய்யும் மக்ளின் இன அடையாளத்தை மறுத்து நாடகம் காட்டும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தலவாக்கலைக்கு ஹட்டனில் இருந்தும் நுவரெலியாவில் இருந்தும் நடக்கிறோம் என பாஷாங்கு காட்டும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய இரண்டு மலையக அரசியல் தரப்புகளுக்கு மத்தியில் ஹட்டன் நகரில் மலையகம்200 என மாநாடு நடாத்தி ‘ஹட்டன் பிரகடனத்தையும்’ செய்ய முன்வந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் ( ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாடு ஓர் அரசியல் கட்சியாக துணிகரமான ஒரு முயற்சியாகும் என முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஒழுங்கு செய்திருக்கும் ‘மலையகம் 200’ ஹட்டன் பிரகடனம் மாநாட்டை ஒட்டி அரங்கம் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே திலகராஜா மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மலையகம் 200 எண்ணக்கருவை 2021 ஒக்டோபர் முதல் தொடர்ச்சியான உரையங்குகள் மூலம் பேசுபொருளாக்குவதில் முன்னின்று செயற்பட்டுவரும் மலையக அரசியல் அரங்கம் இதுவரை 24 தலைப்புகளில் நிகர்நிலையிலும் களத்திலும் உரை அரங்கங்களை நடாத்தி உள்ளது. மன்னார் முதல் மாத்தளை வரையான மக்கள் நடை பயணத்திலும் இணைந்து தனது தோழமையை வெளிப்படுத்தியது.
அதே போல மலையகத் தோழமைக் கட்சியான சமூக நீதிக் கட்சி ஒழுங்கு செய்த ‘மலையகம் 200’ மாநாட்டிலும் கலந்து கொண்டு மலையகத் தமிழ் இன இருப்பு குறித்தான காத்திரமான நிலைப்பாட்டை அறிவித்தது. இதே மாநாட்டில் கலந்து கொண்டு மக்கள் விடுதலை முன்னணி சார்பாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் ” மலையகத் தமிழ் மக்கள் குறித்து 1977 ஆம் ஆண்டு தமது கொள்கை விளக்க பத்திரத்தில் குறிப்பிட்டவாறான அதே நிலைப்பாட்டில் தாம் உறுதியாக” இருப்பதாக கருத்துத் தெரிவித்தார்.
‘குறித்த மக்கள் தரப்பினர் எதனை விரும்புகின்றனரோ அதன்படி செயற்படுவதே’ மக்கள் விடுதலை முன்னணியின் அன்றைய நிலைப்பாடாகக் குறிப்பிடப்பட்டது. அன்றைய நிலையில் குடியுரிமை பறிக்கப்பட்ட நிலையில் இந்தியாவுக்கு திரும்பிச் செல்வதா ? அல்லது இலங்கையில் வாழ்வதா? என்ற உறுதியான தீர்மானமின்றி மலையகத்
தமிழ் மக்கள் வாழ்ந்த காலமாகும்.
இப்போது குடியுரிமை பிரச்சினை தீர்க்கப்பட்டு இலங்கையைத் தமது பூரணமான தாயகமாக வென்றெடுத்துள்ள அந்த மக்கள் தம்மை அர்த்தமுள்ள குடிமக்களாக ‘இலங்கை மலையகத் தமிழர்’களாக ய”பதிவு செய்யக் கோரும் பிரகடனத்தையும் செய்து வருகின்றனர். “இந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணி அதன் தற்போதைய நிலைப்பாட்டை ஒரு மாநாடு ஒன்றின் ஊடாக தெளிவுபடுத்த தயாராக உள்ளதா?” என பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்திடம் கேள்வியை முன்வைத்தேன். “அவ்வாறு செய்ய முடியும்” என்று அவர் பதில் அளித்து இருந்தார். ஒருவித்தில் நான் எழுப்பிய அந்தக் கேள்விக்கு அவர் வழங்கிய பதிலும் கூட அவர்களது ‘மலையகம் 200 ஹட்டன் பிரகடனம்’ மாநாட்டை நடாத்துவதாற்கு ஏதுவாகி இருக்கலாம். அல்லது கட்சியின் நிகழ்ச்சி நிரலாகவும் கூட இருக்கலாம். எவ்வாறெனினும் மக்கள் விடுதலை முன்னணி யின் இந்த முன்வருகை பாராட்டுக்குரியது.
அந்தக் கட்சியின் உருவாக்கத்திற்கு நோர்வூட் நகரில் தோழர் இளஞ்செழியனுக்கும் ரோஹன விஜேவீரவுக்கும் இடையே இடம்பெற்ற பகிரங்க விவாதம் காரணமாக அமைந்ததமை, கட்சியின் ஐந்தாவது வகுப்பில் அவர்கள் கொண்டிருந்த இந்திய விஸ்தரிப்புவாத நிலைப்பாடு, 1980 களின் இறுதியில் பெருந்தோட்டத்துறையை முடக்கும் அவர்களது செயற்பாடுகள் என இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழ் மக்கள் குறித்து எதிர் மனநிலையைக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி தற்போது மலையகம்200 எனும் எண்ணக் கருவில் இணைந்து இருப்பதுடன் ‘ஹட்டன் பிரகடனம்’ ஒன்றையும் செய்வதற்கு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரம் ஹட்டன் பிரகடனம் மலையகத் தமிழ் மக்களின் இன அடையாளம்குறித்தும், காணி உரிமை குறித்தும், தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாக்கல் குறித்தும் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து தலைமுறையாக மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப்பணத்தில் தம்மை வளர்த்துக்கொண்டு இப்போது தான் பிரதிநிதித்துவம் செய்யும் மக்ளின் இன அடையாளத்தை மறுத்து , ‘நாம் 200’ என நாடகம் காட்டும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையகம் 200 என தலவாக்கலைக்கு ஹட்டனில் இருந்தும் நுவரெலியாவில் இருந்தும் நடந்து பாஷாங்கு காட்டிவிட்டு இன அடையாளம் குறித்து உறுதியான தீர்மானம் எடுக்க முடியாது தடுமாறும் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஆகிய இரண்டு மலையக அரசியல் தரப்புகளுக்கு மத்தியில், ஒரு தேசிய கட்சியாக ஹட்டன் நகரில் மலையகம்200 என மாநாடு நடாத்தி ‘ஹட்டன் பிரகடனத்தையும்’ செய்ய முன்வந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் ( ஜேவிபி) ஏற்பாடு துணிகரமான ஓர் அரசியல் வெளிப்பாடாகும். குறித்த பிரகடனம் வெளிவந்த பின்னர் அதன் உள்ளடக்கம் குறித்தும் மலையக அரசியல் அரங்கம் தனது கருத்தை வெளிப்படுத்தும் எனவும் தெரிவத்துள்ளார்.