யாழ். மாவட்டத்தில் பிக்மீ செயலி மூலமான முச்சக்கர வண்டி பயணமுறையை தடைசெய்யக்கோரி முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்று (11) கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
அண்மைய நாட்களில் யாழ் மாவட்டத்தில் பிக்மீ இணைய செயலி பிரபலமடைந்து வருகிறது. இதுவரை யாழ் மாவட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் மனக்கணக்கின் மூலம் நிர்ணயித்த கட்டணங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், யாழ் மாவட்ட பொதுமக்களுக்கு பெரும் ஆறுதலாக பிக்மீ செயலி மூலமாக முச்சக்கர வண்டி பயண வாய்ப்பு அண்மையில் கிட்டியது.
இந்த முறைமையை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக தாம் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்யுமாறு கோரியுமே இன்று போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி, யாழ் நகரில் உள்ள வீதி வழியாக பயணித்து இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்து நிறைவுபெற்றது.