கடந்த மாதம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் 6 வயது சிறுமி கொல்லப்பட்டதுடன், அவரது தந்தை காயமடைந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சேடவத்தை பகுதியில் கார் மீட்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராஜகிரிய ஒபேசேகரபுரவில் உள்ள வீட்டுத் தொகுதியில் கைவிடப்பட்ட காரை மீட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு உதவிய மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
செப்டெம்பர் 17ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுமி ஒருவர் கொல்லப்பட்டதுடன் அவரது தந்தை படுகாயமடைந்தார். வழக்கு ஒன்று தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறும் போது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. உயிரிழந்த குழந்தையின் தந்தை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான 36 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட ஆதம் லெப்பை, மொஹமட் மின்ஹாஜ் மற்றும் செய்யது இஷாக் மன்சூர் ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.