தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு விடுத்த மனிதச்சங்கிலி போராட்டம் கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்தது. இந்த போராட்டத்தில் எதிர்பார்த்தளவு மக்கள் கலந்துகொள்ளவில்லை.
மருதனார்மடமத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரை மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்த வேண்டுமென்பது தமிழ் கட்சிகளின் அழைப்பு. இந்த தூரத்தில் பாதியனவு தூரத்தை கூட மனிதச்சங்கிலி அணிவகுப்பு நிரப்பவில்லை.
இந்த போராட்ட அழைப்பு விடுக்கப்பட்ட சமயத்தில், கிட்டத்தட்ட அழைப்பு விடுத்த அனைத்து கட்சிகளின் பிரமுகர்களுடனும் தொலைபேசியில் பேசியிருந்தேன். இவ்வளவு தூரத்துக்கு மனிதசங்கிலி போராட்டத்தை தமிழ் கட்சிகளால் நடத்த முடியுமா என்ற சந்தேகத்தை அவர்களிடம் கேட்டிருந்தேன்.
அவர்கள் அனைவருமே அதை வெற்றிகரமாக நடத்தலாம் என நம்பியிருந்தார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் தரப்புக்களின் பலவீனத்தால் மக்கள் பெருமளவு அதிருப்தியடைந்துள்ளனர். ஒரு பகுதியினர் அரச தரப்பை, அரச தரப்புடன் இயங்கும் கட்சிகளை ஆதரிப்பவர்களாக மாறிவிட்டனர்.
பெருமளவானவர்கள், நம்பிக்கையற்ற இந்த அரசியலில் அக்கறை செலுத்துவதை நிறுத்தி விட்டு, தாமும், குடும்பமும் என இருக்கிறார்கள்.
இன்றைய திகதியில் வடக்கில் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்பவர்களின் புகைப்படங்களை நன்றாக அவதானித்து பாருங்கள். எல்லா போராட்டங்களிலும் ஒரே ஆட்களே கலந்து கொள்கிறார்கள். அரசியலில் அதிதீவிர ஆர்வம் கொண்ட இந்த தரப்பினர், எந்த பகுதியில் போராட்டம் நடந்தாலும், அங்கு சென்று கலந்து கொள்கிறார்கள். இதனால்தான் நமது போராட்டக்களங்களில் 50 பேர் கூடினாலே, ‘அலையென திரண்ட மக்கள் கூட்டம்’ என புளகாங்கிக்கக்கூடிய நிலைமையேற்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், தமிழ் கட்சிகள் தமது பலவீனத்தை மேடை போட்டு காண்பிக்காமல்- மக்களை மேலும் நம்பிக்கையீனமடைய செய்யும் காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதும் முக்கியம்.
தமிழ் தேசிய கட்சிகள் பலமிழப்பதற்கும், போராட்டத்ங்களில் ஆட்களை சேர்க்க முடியாமலிருப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை சில- இந்த கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்களின் சோம்பேறித்தனம், திட்டமிடலில்லாமை, எப்படியும் தமிழ் தேசிய குதிரையில் சில காலம் பயணித்து விடலாமென்ற அசையாத நம்பிக்கை போன்ற விடயங்கள் உள்ளன.
இதற்கு உதாரணமாக மனிதச் சங்கிலி போராட்டத்தை குறிப்பிடலாம்
மனிதச்சங்கிலி போராட்டத்தில், கட்சிகள் நிரப்ப வேண்டிய இடங்கள் கூட ஒதுக்கப்பட்டிருந்தன. மருதனார்மடத்தில் போராட்டம் ஆரம்பிக்கும். அங்கிருந்து இணுவில் சந்தி வரை தமது ஆதரவாளர்கள் கைகோர்ப்பார்கள் என புளொட் தெரிவித்துள்ளது. என்றாலும், உப்புமடம் சந்திவரை புளொட் ஆதரவாளர்களை கைகோர்க்கும்படி ஏனைய கட்சிகள் கேட்டனர். புளொட் சம்மதித்தது.
உப்புமடம் சந்தியில் இருந்து கொக்குவில் சந்திவரை இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆதரவாளர்கள் கைகோர்க்க ஒதுக்கப்பட்டிருந்தது.
கொக்குவில் சந்தியில் இருந்து தட்டாதெரு சந்திவரை ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆதரவாளர்கள் கைகோர்க்க ஒதுக்கப்பட்டிருந்தது.
தட்டாதெரு சந்தியில் இருந்து யாழ்ப்பாண நகரம் வரை ஜனநாயக போராளிகள் கைகோர்க்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த ஒதுக்கீட்டு பிரதேசத்தில், எங்கெல்லாம் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறதோ- அங்கெல்லாம் தமது ஆதரவாளர்கள் இட்டு நிரப்புவார்கள் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா குறிப்பிட்டிருந்தார்.
அந்த கலந்துரையாடலில் விக்னேஸ்வரன் தரப்பு கலந்து கொண்டிருக்கவில்லை.
4ஆம் திகதி கதவடைப்பு போராட்டத்தில், மருதனார்மடத்தில் இருந்து இணுவில் சந்திக்கு சற்று முன்பாக உள்ள தியேட்டர் சந்திவரை கைகோர்த்திருந்தனர். அன்றைய போராட்டத்தில் புளொட் தரப்பின் ஏற்பாட்டில்தான் அதிகளவானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தியேட்டர் சந்தியிலிருந்து உப்புமடம் சந்திவரை மனிதசங்கிலி இல்லை.
உப்புமடம் சந்தியில் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் 35, 40 தமிழ் அரசு கட்சிக்காரர்கள் கூடியிருந்தனர்.
கொக்குவில் சந்தியில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஆதரவாளர்களும், விக்னேஸ்வரனும் ஆதரவாளர்களும்,மணிவண்ணனும் ஆதரவாளர்களும் என திரண்டும், அங்கு பெரிய கூட்டமில்லை.
எங்கெல்லாம் இடைவெளியுள்ளதோ, அங்கெல்லாம் ஆட்களை நிரப்ப தயாராக இருந்த தமிழ் தேசிய கட்சி லைவர் சிறிகாந்தா, தனது கட்சிக்காரர் ஓரிருவருடன் அங்கு நின்றார்.
இந்த இடைப்பட்ட தூரத்துக்குள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் கண்களை கட்டிக்கொண்டு அணி வகுத்திருந்தனர்.
மனிதசங்கிலி யாழ்ப்பாணம் வரை நடக்குமென அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்கள் இல்லாததால் கொக்குவில் பகுதியில் முடிக்கப்பட்டது.
தட்டாதெரு சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் வரையான தூரத்தை நிரப்ப தயாராக இருந்த ஜனநாயக போராளிகள் கட்சியினர் சுமார் 12 பேர் வரையில் வந்திருந்தனர்.
இதுதான் தமிழ் கட்சிகளின் நிலைமை. ஆனால் கட்சிகள் மிதமிஞ்சிய நம்பிக்கையை கொண்டிருந்தன. தமிழ் கட்சிகள் தமது பலம் என்னவென்து பற்றி சுயரிசோதனை செய்ய வேண்டும்.
மனிதச்சங்கிலி போராட்டம் சறுக்கியதும், கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டம் அடுத்த வாரம் என யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்தன. அடுத்த வாரத்தில் 13ஆம் திகதி கதவடைப்பு போராட்டத்தை நடத்த திட்டமிடுகிறார்கள் என தமிழ்பக்கம் அன்றே செய்தி வெளியிட்டது. இந்த இரண்டு சம்பவங்களும் 6ஆம் திகதி நடந்தது.
இன்று 8ஆம் திகதி. இந்த பகுதியை எழுதும் போது அண்ணளவாக காலை 10 மணியை நெருங்குகிறது. இதுவரை, இந்த போராட்டத்தை அறிவித்த யாருமே கிழக்கிலுள்ள தமிழ் எம்.பிக்களுடன், கட்சிகளுடன் பிரமுகர்களுடன் பேசவில்லை. கிழக்கில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் கோவிந்தன் கருணாகரம், தமிழ் அரசு கட்சியின் இரா.சாணக்கியன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கதவடைப்பு போராட்டத்தை அறிவித்த யாருமே கிழக்கில் உள்ளவர்களை ஒரு பொருட்டாக கருதவில்லை.
கிழக்கை விடுங்கள்- நமது தலைவர்களுக்கு அது எட்டாத தொலைவில் உள்ளது. (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகி நீண்ட மாதங்களாகி விட்டது. ஒருமுறை கூட கிழக்கில், கூட்டணியின் உயர்மட்ட கூட்டங்கள் எதையும் வைக்கவில்லை. நீண்டகாலமாக கிழக்கில் கூட்டம் நடத்த திட்டமிடப்படும் போதும், கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் கிழக்கிற்கு பயணிக்க உடல்நிலை ஒத்துக்கொள்ளாததாலோ அல்லது என்னவோ அங்கு செல்ல மறுத்ததால் சந்திப்புக்கள் நடக்கவில்லை)
கதவடைப்பு போராட்டம் என அறிவிக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாண வணிகர் கழகத்துடன் ஒரு சந்திப்பை இந்த கட்சிகள் நடத்தினார்கள். அதை தவிர, நாளை பொதுஅமைப்புக்களுடன் ஒரு கலந்துரையாடலாம். அதுவும் யாழ நகரில்தான்.
யாழ்ப்பாணத்திலேயே நகருக்கு வெளியில் உள்ள வணிகர்கழகங்கள், யாழ் மாவட்டத்துக்கு வெளியில் உள்ள வணிகர் கழங்கங்களுடன் கூட பேசவில்லை. அந்த பொறுப்பை அந்தந்த மாவட்டங்களில் உள்ள கட்சி பிரமுகர்களிடம் வழங்கவுமில்லை. கட்சி பிரமுகர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கக்கூட நமது தலைவர்களுக்கு பஞ்சியாக இருந்திருக்கலாம்.
நம்மால் முடியாத காரியங்களை செய்ய முயன்று நமது பலவீனங்களை தொடர்ந்து வெளிப்படுத்தி, மேலும் மேலும் தமிழ் தேசிய அரசியலை பின்னடைய வைக்காமலிருப்பது நமது தலைவர்களின் தலையாய பொறுப்பு. சில விடயங்களை செய்யாமலிருப்பதும் பலம்தான். தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஜனநாயகமில்லையென்பதற்காக வெளியேறி உருவாகிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, மேடை கிடைத்த சிறு பிள்ளைகள் போல செயற்படக்கூடாது. 3 மாதங்களுக்கு ஒரு கதவடைப்பு, ஆயுதப் போராட்ட அறிவிப்பு என அரசியலை நகைச்சுவையாக்கினால், இவர்கள் சம்பந்தரின் தலைமையின் கீழேயே இருந்திருக்கலாம் என மக்கள் கருதத் தொடங்கி விடுவார்கள்.
-பீஷ்மர்-