ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படுவதற்கு ஜனாதிபதி செயலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பியிருந்த 300 சட்டத்தரணிகளில் 34 பேர் மாத்திரமே தேவையான தகுதிகளை கொண்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி சட்டத்தரணி நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களை பூர்த்தி செய்வதற்காக விண்ணப்பதாரர்களின் தகுதிகளை மதிப்பிடுவதற்கு முன்னாள் பிரதம நீதியரசர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்தக் குழு தேவையான தகுதிகளைக் கொண்ட 34 பெயர்களின் பட்டியலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பவுள்ளது. ஜனாதிபதி தனது விருப்புரிமையைப் பயன்படுத்தி அவர்களில் 10 பேரை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிப்பார். ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் தொடர்பான வர்த்தமானியின் பிரகாரம் வருடாந்தம் 10 நபர்களை மாத்திரமே ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்க முடியும்.
ஜனாதிபதி சட்டத்தரணியை நியமிப்பதற்கான அளவுகோல்களை குறிப்பிடும் வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் உயர் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு அமைய வெளியிடப்பட்டது.