25.4 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இந்தியா

பக்தைகளினால் பற்றிய வாரிசுச் சண்டை: நித்தியானந்தாவின் கைலாசாவில் கலகம்!

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சாமியார் நித்யானந்தாவைச் சுற்றி ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்புவது வழக்கமாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு, அவர் இறந்து விட்டதாகத் தகவல் பரவியது. சமூக வலைதளங்களில், அவருக்கு ‘RIP’ போட்டுவிட்டு அவருடைய பழைய வீடியோக்களையெல்லாம் மீம்களாகப் பகிரத் தொடங்கினார்கள் நெட்டிசன்கள். பிறகு திடீரென நித்யானந்தாவும் வீடியோவில் தோன்றி “நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். உங்களை ஆன்மிகரீதியாக உயர்வுக்குக் கொண்டுசெல்லும் வரையில் என் உயிர் பிரியாது” என விளக்கமும் அளித்தார். அந்தச் சர்ச்சை ஓய்ந்த நிலையில், இப்போது புது விவகாரம் ஒன்று வெடித்திருக்கிறது!

தான் உருவாக்கிய கைலாசா நாட்டுக்கென வங்கியை நிர்மாணித்து, கரன்சியை வெளியிட முடிவெடுத்திருக்கிறார் நித்யானந்தா. அதற்காகத் தங்கக்கட்டிகளையும், பெரும் தொகையையும் முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. இதை யார் கையாள்வது  என்பதில்தான் நித்யானந்தாவைச் சுற்றியிருப்பவர்களிடையே பெரும் பிரச்னை வெடித்திருக்கிறது.

கைலாசா நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்ட ரஞ்சிதாவுக்கும், நித்யானந்தா வின் வெளிநாட்டுச் சீடர்களுக்கும் இடையே பெரிய யுத்தமே வெடித்துள்ளதாக கூறப்படும சம்பவத்தின் பின்னணி பற்றிய செய்தி இது.

இந்தியாவில், சாமியார் நித்யானந்தா மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் பதிவாகியிருக்கும் இந்த வழக்குகளில், பாலியல் துன்புறுத்தல் புகாரும் அடக்கம். தனக்கெதிராக நீதிமன்ற, காவல் நடவடிக்கைகள் தீவிரமானவுடனேயே, 2019ஆம் ஆண்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார் நித்தி.

வெளிநாட்டில் இருந்தபடியே, ஆன்லைனில் ஆன்மிகச் சொற்பொழிவுகள், குண்டலினி சக்தியை எழுப்புவதற்கான யோகப் பயிற்சிகளை அளித்துவருகிறார்.

‘கைலாசா’ என்றொரு நாட்டை நிறுவியிருப்பதாகவும், விரைவில் அந்த நாட்டில் குடியமர்வு செய்யவிருப்பதாகவும் நித்தி அறிவிக்கவும், பலருக்கும் ஷாக். அடுத்ததாக, ஐ.நாவின் மனித உரிமை தொடர்பான ஒரு கருத்தரங்கில் பங்கேற்ற நித்தியின் பெண் சீடர்கள், ‘கைலாசா தேசத்துக்கு ஐ.நாவின் அங்கீகாரம் கிடைத்து விட்டது’ என அடுத்த புரளியைக் கிளப்பிவிட்டனர். இப்படிப் புரளிக்கு மேல் புரளியைக் கிளப்பி, குறளி வித்தை காட்டிக்கொண்டிருக்கும் நித்தி முகாமில், வாரிசுச் சண்டை வேற லெவலில் வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம், திருவண்ணாமலை ஆசிரம சீடர்கள் சிலர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒரு பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், நித்யானந்தாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டைப் பிறப்பித்திருக்கிறது கர்நாடகா நீதிமன்றம். அதிலிருந்தே நித்யானந்தாவும், அவரைச் சுற்றியிருப்பவர்களும் பதற்றத்துடன்தான் இருக்கிறார்கள். அதற்குக் காரணங்களும் இருக்கின்றன.

வீடியோக்கள் மூலமாகத்தான் ஆன்மிக வகுப்புகளை நடத்துகிறார் நித்யானந்தா. 7 இலட்சம் ரூபாயில் தொடங்கி 15 இலட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் இந்த வகுப்புகளில், பெருமளவில் வெளிநாட்டினர்தான் பங்கேற்கிறார்கள். ஆன்லைன் மூலமாகவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நித்யானந்தாவுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கும் சூழலில், அதைவைத்தே சர்வதேச காவல் அமைப்பான ‘இன்டர்போலில்’ அவருக்கு எதிராக ரெட் கோர்னர் நோட்டீஸ் வழங்க வைக்க கர்நாடகா காவல்துறை தயாராகிறது. நோட்டீஸ் வழங்கப்பட்டால், நித்யானந்தாவின் சர்வதேச வங்கிக் கணக்குகளும், அவரைச் சார்ந்து இயங்கும் டிரஸ்ட்டுகளின் கணக்குகளும் முடக்கப்படும்.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில், ஆசிரம நிர்வாகிகளுடன் நித்யானந்தா கலந்துரையாடினார். அப்போது, ‘ஒரு நாட்டை உருவாக்கிட்டோம். நாமே வங்கி ஒன்றை ஆரம்பிச்சுட்டா என்ன?’ என அவர் கேட்கவும், ‘உருவாக்கின நாடே எங்கேயிருக்குனு தெரியலை… இதுல வங்கியை எப்படி ஆரம்பிக்குறது?’ எனச் சில நிர்வாகிகள் துணிச்சலாகக் கேள்வி எழுப்பினர். உஷ்ணமானவர், ‘உங்க யாரையும் நம்பி நானில்லை. என் வெளிநாட்டு பக்தர்களை வைத்துப் பார்த்துக்கொள்கிறேன்’ எனத் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார். அதன் பிறகு தொடர்புக்கு வரவேயில்லை.

கைலாசா நாட்டுக்கென வங்கி ஆரம்பிக்கும் பொறுப்பைத் தன்னுடைய பிரதான சிஷ்யையான விஜயப்ரியா நித்யானந்தாவிடம் ஒப்படைத்திருக்கிறார் அவர். அதில்தான் பிரச்னை வெடித்திருக்கிறது.

விஜயப்ரியா

யார் இந்த விஜயப்ரியா?

அமெரிக்காவைச் சேர்ந்தவரான விஜயப்ரியா, கனடா பல்கலைக்கழகத்தில் மைக்ரோ பயோலஜி படித்தவர். 2010ஆம் ஆண்டிலிருந்து நித்யானந்தாவின் தீவிர சிஷ்யையாக அவரைப் பின்தொடர்பவர். நான்கு மொழிகள் தெரிந்துவைத்திருப்பதாலும், விசுவாசியாக இருப்பதாலும் அவரை கைலாசா நாட்டின் ஐ.நாவுக்கான நிரந்தரத் தூதராக நியமித்தார் நித்யானந்தா.

ஐரோப்பாவிலுள்ள ஆசிரமங்கள், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள ‘நித்யானந்தா வேதிக் டெம்பிள்’ வரவு, செலவுகள் எனப் பல நிர்வாகங்களையும் பார்த்துக்கொள்வது விஜயப்ரியாதான்.

ஐரோப்பாவிலுள்ள மொனாகோ நாட்டில், சூதாட்ட விடுதிகள் பிரபலம். அவற்றில், ஆசிரமத்தின் கணிசமான தொகையை நித்யானந்தாவுக்காக முதலீடு செய்து பாதுகாக்கிறார் விஜயப்ரியா. இதுபோக, நித்யானந்தா இந்தியாவிலிருந்து வெளியேறியபோது அவருடன் எடுத்துச் செல்லப்பட்ட பல நூறு கிலோ தங்கக் கட்டிகளும் கணிசமான அளவில் விஜயப்ரியா பொறுப்பில்தான் இருக்கின்றன. இவ்வளவு தூரம் நம்பிக்கை வாய்ந்தவர் என்பதால்தான், அவரிடம் கைலாசாவுக்கென வங்கியை உருவாக்கும் திட்டத்தை அளித்தார் நித்யானந்தா.

ஐரோப்பாவிலுள்ள லக்ஸம்பர்க் நாட்டில், வரி விவகாரங்கள் அவ்வளவு கெடுபிடியாக இல்லையென்பதால், அங்கு வங்கியைத் தொடங்க முடிவானது. ஒரு வங்கியைப் புதிதாகத் தொடங்குவதைவிட, ஏற்கெனவே செயல்படும் வங்கியை வாங்குவது நிர்வாகரீதியாகச் சுலபம். அதேநேரம், பெரும் தொகையையும் கிலோ கணக்கில் தங்கக் கட்டிகளையும் லக்ஸம்பர்க் மத்திய வங்கியிடம் செக்யூரிட்டி டெபாசிட்டாக அளிக்க வேண்டும். அந்தப் புதிய ‘கைலாசா வங்கி’க்கு, ஆசிரமக் கணக்குகளை மாற்றிக்கொள்ளத் திட்டமிடப்பட்டது. அதற்கான முயற்சிகளை எடுத்த விஜயப்ரியா, நித்யானந்தாவின் சர்வதேச முதலீடுகள், பரிவர்த்தனைகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பினார்.

அவருடன், கைலாசாவின் பிரான்ஸ் நாட்டுத் தூதர் நித்ய வெங்கடேசானந்தா, ஸ்லோவேனிய தூதர் ப்ரியம்பர நித்யானந்தா, இங்கிலாந்து தூதர் நித்ய ஆத்மதாயகி ஆகியோரும் கூட்டணி போட்டுக்கொண்டு, மொத்த நிதி விவகாரங்களையும் கையாளத் திட்டமிடுகிறார்கள்.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்களிடம் ஆசிரமத்தின் நிதி விவகாரம் குவிவதை, இந்தியாவைச் சேர்ந்த ஆசிரம நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லை. குறிப்பாக, நித்யானந்தாவுடன் நீண்டகாலமாகப் பயணித்துவரும் நடிகை ரஞ்சிதா இதைச் சுத்தமாக ரசிக்கவில்லை.

‘மாத்திரை எடுத்துக் கொடுத்தவர் பிரதமரா?’ – பற்றிக்கொண்ட வாரிசுச் சண்டை!

கடந்த மே மாதம், நித்யானந்தாவின் உடல்நிலை மோசமானது. குடலிறக்க நோயால் அவதிப்பட்டவருக்கு, சீசெல்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழரான ஒரு மருத்துவர்தான் சிகிச்சையளித்தார். தன் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, கைலாசா நாட்டின் நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவர முடிவெடுத்த நித்யானந்தா, ரஞ்சிதாவை நாட்டின் பிரதமராக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். ‘ரஞ்சிதாதான் நித்யானந்தாவின் வாரிசு’ எனப் பரவலாகப் பேசப்பட்டது. இதை, வெளிநாட்டு நிர்வாகிகள் ஏற்கவில்லை. ஓப்பனாகவே நித்யானந்தாவிடம் சண்டையிட்டனர்.

ரஞ்சிதா

‘உங்களுக்கு மாத்திரை எடுத்துக் கொடுக்கவும், சாப்பாடு எடுத்துவைக்கவும் ஆசிரமத்துக்கு வந்தவர்தான் ரஞ்சிதா. ‘மா நித்யானந்த மாயி சுவாமி’ எனப் பெயர் மாற்றிக்கொண்டால், அவரின் பழைய வரலாறு மாறிவிடுமா… ஆன்மிகத்தில் அவர் எந்த உயர்நிலையையும் அடையவில்லை. எங்களைப்போல வெளிநாட்டில் உங்கள் புகழைப் பரப்பவில்லை. இதுவரை, 30 சர்வதேச நகரங்களின் மேயர்களிடம் கைலாசாவுக்கான அங்கீகார லெட்டர்களைப் பெற்றிருக்கிறோம். ரஞ்சிதா என்ன செய்தார்… அவரை கைலாசாவின் பிரதமராக ஏற்க முடியாது’ என நித்யானந்தாவின் முடிவுக்கு எதிராக மல்லுக்கட்டினார்கள். பதிலுக்கு ரஞ்சிதாவும் மோதத் தொடங்கினார்.

கைலாசாவின் பிரதமருக்கென சமூக வலைதளப் பக்கங்கள் இயங்குகின்றன. அவற்றில், தன்னுடைய சொற்பொழிவுகளைப் பதிவிடச் சொன்னார் ரஞ்சிதா. அந்தப் பக்கங்களை வெளிநாட்டு நிர்வாகிகள்தான் கையாள்வதால், ரஞ்சிதாவின் உத்தரவை அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆசிரமத்தின் கணக்கு விவரங்களை ரஞ்சிதா கேட்கவும், டென்ஷனான வெளிநாட்டு கோஷ்டி, நித்யானந்தாவிடம் ரஞ்சிதாவைப் பற்றி தவறாகச் சொல்லி, இருவருக்கும் இடையே இருந்த நட்பையே நிர்மூலமாக்கிவிட்டனர்.

நித்யானந்தா ஆசிரமத்துக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஏகப்பட்ட சொத்துகள் இருக்கின்றன. தன்னுடைய பேச்சு சாதுர்யத்தால் பல நூறு கோடிகள் சம்பாதித்துவிட்டார் நித்யானந்தா. கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் மட்டுமே மூழ்கிக் கிடப்பவர்களுக்கு அவருடைய போதனைகள் போதையை உருவாக்கியிருக்கின்றன. அதை மூலதனமாக்கி, பண அறுவடை செய்யப் பார்க்கிறது வெளிநாட்டு சீடர்கள் கோஷ்டி. அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் நித்யானந்தா தற்போது முழுவதுமாக இருக்கிறார். இதை ரஞ்சிதாவும், இந்தியாவைச் சேர்ந்த ஆசிரம நிர்வாகிகளும் எதிர்த்து கேட்பதால்… அவர்கள், ஆசிரமத்தின் மேல்மட்ட நடவடிக்கைகளிலிருந்து மொத்தமாக விலக்கிவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆசிரமத்தில் வாரிசுச் சண்டை உச்சத்தில் இருக்கிறது” என்றனர் விரிவாக.

“இவ்வளவு பிரச்னைகள் ஆசிரமத்திற்குள் ஓடும் நிலையில், இது எதையுமே புரிந்துகொள்ளும் மனநிலையில் நித்யானந்தா இல்லை” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான பிடதி ஆசிரம முன்னாள் நிர்வாகிகள்.

நம்மிடம் பேசிய அவர்கள், “ஃபிஜி தீவுக்கு அருகேயுள்ள ஒரு தீவில்தான் தற்போது இருக்கிறார் நித்யானந்தா. அந்தத் தீவை பனாமாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரில் வாங்கியிருக்கிறார்கள். அவுஸ்திரேலியா நாட்டிலிருந்து இரண்டு மணி நேரக் கடல் பயண தூரத்திலிருக்கிறது அந்தத் தீவு. அவருடன் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்தான் பெருமளவில் இருக்கிறார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு அங்கு மதிப்பில்லை என்பதால், சில மாதங்களுக்கு முன்னர் அங்கிருந்து வந்துவிட்டோம். முழுவதும் வெளிநாட்டு பிரஜைகளின் கட்டுப்பாட்டில்தான் நித்யானந்தா இருக்கிறார். உணவில் என்ன கலந்து கொடுக்கிறார்களோ தெரியவில்லை… பித்துப் பிடித்ததுபோல, ‘நானே கடவுள். பல உலகங்களிலும் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’ எனப் பேசுகிறார். அவ்வப்போது, கண்கள் நிலைகுத்திப்போய் மயக்கமடைந்து விடுகிறார். இதெல்லாம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், நித்யானந்தாவின் மனம் முழுக்க இந்தியா திரும்ப வேண்டும் என்கிற ஆசைதான் இருக்கிறது. அவரைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் மர்மமாகவே இருக்கின்றன.

ஆசிரம நிர்வாகத்தில் ரஞ்சிதா தரப்புக்கும், வெளிநாட்டுச் சீடர்கள் தரப்புக்கும் இடையே வாரிசுச் சண்டை எழுந்திருப்பது உண்மைதான். நித்யானந்தாவிடம் தன்னை வெளிநாட்டினர் நெருங்கவிடாததால், தானே ஆன்மிகச் சொற்பொழிவு வீடியோக்களை வெளியிட்டு ரணகளம் செய்துவருகிறார் ரஞ்சிதா. பின்னணியில் நித்யானந்தாவின் புகைப்படங்களுடன் வெளியிடப்படும் இந்த வீடியோக்கள், இந்தியாவிலுள்ள சீடர்களைக் குறிவைத்து பரப்பப்படுகின்றன. தன்னை நித்யானந்தாவின் வாரிசாக நிறுவி, இந்தியாவிலுள்ள ஆசிரமச் சொத்துகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப் பார்க்கிறார் ரஞ்சிதா. இந்தப் பிரச்னை எதையும் புரிந்துகொள்ளும் மனநிலையிலோ, உடல்நிலையிலோ நித்யானந்தா இல்லை. அவர் வேறோர் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். மொத்தமாக, கைலாசாவே கலகலத்துப் போயிருக்கிறது” என்றனர் வருத்தத்துடன்.

வெளிநாட்டில் ஒரு நாட்டைக் கட்டமைத்திருப்பதாகக் கூறிவரும் நித்யானந்தா, அடிப்படையில் இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளி. அவர் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றிவருவதையும், அதன் மூலமாகக் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பதையும் இதுவரை எந்த அரசு அமைப்புகளும் தடுக்கவில்லை. அதன் விளைவு… தனி நாடு, தனி வங்கி, தனி கரன்சி, ஐ.நா முழக்கம், வாரிசுச் சண்டை என வந்து நிற்கிறது.

கனடாவில் பதுங்கியிருக்கும் போராளிகளை கண்டுபிடிக்கத் தெரிந்த இந்திய உளவு அமைப்புகளுக்கு, யூ டியூப்பில் வீடியோ வெளியிடும் நித்யானந்தாவைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது ஆச்சர்யம்தான். அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதால் மட்டுமே, தொடர்ச்சியான மோசடிகளைத் தடுக்க முடியும். தவிர, நித்யானந்தாவின் உயிருக்கும் அதுதான் பாதுகாப்பானதும்கூட.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு

Pagetamil

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

Leave a Comment